சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி!

சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், வரும் 27-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, மத்திய குற்றப் பிரிவில் (சி.சி.பி.) 2011–ம் ஆண்டு வரை பல வழக்குகளில் விசாரணை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்குகளின் நிலைகுறித்த அறிக்கையை அளிக்கும்படி, மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்கு விசாரணையை இரண்டு மாதத்தில் முடிக்க, அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அறிக்கை அனுப்ப வேண்டும். நான்கு மாதங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யாவிட்டால், உயர்நீதிமன்றத்தில் காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துபூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, உயர்நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் தாமதமாக அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வரும் 27-ம் தேதி காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றம், 'கமிஷனர் ஜார்ஜ் மார்ச் மாதம் 27-ம் தேதிக்குள் ஆஜராகாவிடில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்படும்' என்று உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!