வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (20/03/2017)

கடைசி தொடர்பு:14:21 (20/03/2017)

இலங்கைத் தீர்மானத்தை எதிர்த்து தமிழ் அமைப்புகள் போராட்டம்!

ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை அரசு கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திருமாளவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மே17 இயக்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

போராட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இலங்கை அரசு கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், 'இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசு, சர்வதேச விசாரணையை மறுத்து வருகிறது. இலங்கை அரசு இனப்படுகொலை மீதான விசாரணையைத் தாமதப்படுத்த மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இந்தச் செயல், விசாரணையைத் தாமதப்படுத்தும் செயல். இலங்கையின் இந்தச் செயலுக்கு இந்தியா துணைபோகக் கூடாது. தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா சபை முன்வர வேண்டும்' என்று தெரிவித்தார்.