ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனுக்காக களம் இறங்கும் குழு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

R.k.nagar election
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆர்வமாக வேட்பு மனு தாக்கல்செய்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்துவிட்டது. இரட்டை இலையை சசிகலா- பன்னீர்செல்வம் அணியினர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில்தான் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு புறம் தி.மு.க தரப்பில் மருதுகணேஷ், தே.மு.தி.க. வேட்பாளராக மதிவாணன், பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அணியினரும் களம் இறங்க உள்ளனர். 

இடைத்தேர்தலில், வழக்கமாக ஆளுங்கட்சிதான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த முறை, யூகிக்க முடியாத சூழல் நிலவிவருகிறது. அனைத்து தரப்பினரும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர். ஓ.பி.எஸ் அணி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பரப்புரை செய்துவருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட உள்ள தோழமைக் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பணிகளை நெறிப்படுத்த, பின்வரும் கட்சி நிர்வாகிகளைக்கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அதன்விவரம் வருமாறு:

அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடம்பூர் செ.ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டி.டி.வி.தினகரனுக்கு வாக்குக் கேட்டு பிரசாரம்செய்ய உள்ள நட்சத்திரப் பேச்சாளர்களை ஒருங்கிணைக்கவும், தேர்தல் பிரசாரத்தின் வியூகங்களை வகுக்கவும் பின்வரும் நிர்வாகிகளைக்கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, எம்.சி.சம்பத், செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!