வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (20/03/2017)

கடைசி தொடர்பு:14:31 (20/03/2017)

மத்திய அமைச்சர்களைச் சந்திக்க ஏற்பாடு! தமிழக விவசாயிகளிடம் தம்பிதுரை வாக்குறுதி!

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள், நாளை மத்திய அமைச்சர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

டெல்லி, ஜந்தர் மந்தரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் ஏழாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரை நிர்வாணமாகவும், கழுத்தில் மண்டை ஓட்டைக் கட்டித் தொங்கவிட்டபடியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இந்நிலையில், ஏழாவது நாள் போராட்டத்தின்போது தமிழக அரசு சார்பில் அ.தி.மு.க எம்பி-க்கள் தம்பிதுரை, நவநீதி கிருஷ்ணன் உள்ளிட்டோர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 'விவசாயக் கடன் தள்ளுபடிசெய்வது தொடர்பாக நிதியமைச்சர் அருண்ஜெட்லியையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியையும் நாளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு கூறுகையில், 'பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல்  ஓரமாகப் போராடுகிறோம். தம்பிதுரையின் வாக்குறுதியை 100% ஏற்கிறோம். போராட்டத்தைக் கைவிடுவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும்' என்றார்.