Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“காபி வித் எம்.எல்.ஏ நிகழ்வுக்கு வராத எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ***!” - சாடும் டி.எம்.கிருஷ்ணா

எம் எல் ஏக்கள் வராத காபி வித் எம்.எல்.ஏ

"அரசியல் ஒரு சாக்கடை" என்றார் தந்தை பெரியார். சாக்கடையாக மாறிவிட்ட தமிழக அரசியலை சுத்தம்செய்ய களம் இறங்கி விட்டார்கள் இன்றைய இளைஞர்கள். இளைஞர்களின் இந்த எழுச்சியை பொதுவுடமைவாதிகள் பலரும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். அரசியல்வாதிகளை நம்பி இனி எந்த பிரயோஜனமும் இல்லை என்று கருதி பொதுமக்களின் பிரச்னைகளைக் கையில் எடுத்து இளைஞர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாகத்தான் 'காபி வித் எம்.எல்.ஏ' (coffee with M.L.As) என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும், சட்டசபையில் அவரது தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன் நடந்த காய்நகர்த்தல்களின் ஒருபகுதியாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கள் தொகுதி மக்களைச் சந்திப்பதில்லை என்ற புகார் உள்ளது. ஆனால் பொதுமக்களின் புகாரை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களையும் எம்.எல்.ஏ-க்களையும் இணைக்கும் பொதுமேடை நிகழ்ச்சியாக காபி வித் எம்.எல்.ஏ நிகழ்வை, சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மார்ச் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 'அறப்போர் இயக்கம்' அமைப்பும் இணைந்து அதனை முன்னெடுத்துச் சென்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட 122  எம்.எல்.ஏக்களில் ஒருவர்கூட வந்து கலந்து கொள்ளவில்லை.

டி.எம்.கிருஷ்ணா

ஓடி ஒளிந்துவிட்டீர்களா?

பறையாட்டத்துடன் களை கட்டிய நிகழ்ச்சியில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ’மக்கள் குரல்’ என்ற பெண்கள் குழுவினர் ஒன்றுகூடி, அவர்களே கம்போஸ் செய்த பாடலைப் பாடி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுத்தனர். 

"ஓட்டுப் போட வா!
உரிமை கோர வா!
நம் நாடு அல்லவா...
நம் கடமை அல்லவா!
தலைமையைத்தான் தேர்ந்தெடுக்கும் நேரமல்லவா!
நல்ல தலைமை கையில் நாட்டைக் கொடுக்கும் தருணமல்லவா!
மக்கள் குரல் கேட்காம,
மக்கள் குறைய தீர்க்காம,
எங்கதான் இருக்கீங்க,
என்னதான் செய்யறீங்க,
இங்க வந்து சொல்லுங்க" என்று முழங்கிய அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அரசியல்வாதிகளுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

வராத எம்.எல்.ஏ-க்கள் புறம்போக்குகள்...

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பலரும் பங்கேற்று, இளைஞர்களுக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா, "நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சுதந்திரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. பாரதியார் சுதந்திரத்திற்காகப் பாடிய பாடலைத் தொடர்கிறேன்" என்றவர், "ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" என அந்த முழுப் பாடலையும் பாடி முடித்தார்.

நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், "இங்கு வராத எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புறம்போக்குகள். நான் புறம்போக்கு என்பதை நல்ல வார்த்தையாகவே சொல்கிறேன். நானும் ஒரு புறம்போக்கு...நீங்க ஒரு புறம்போக்கு...இந்த வார்த்தையை உபயோகித்ததன் மூலம் நான் யாரையும் திட்டவில்லை. புறம்போக்கு என்பது எல்லாருக்கும் சொந்தமான வார்த்தை. இந்த நாடு எல்லாருக்கும் சொந்தமானது. ஜனநாயகம் என்பதும் அனைவருக்கும் சொந்தமான விஷயம். அதனால் நாம் புறம்போக்காக இருந்தால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள்

வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகக் கடமை அல்ல. ஆண்டு முழுவதும்...365 நாட்களும் நாட்டு மக்களைப் பற்றிய சிந்தனையே இருக்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். இன்றைய சூழலில் எம்.எல்.ஏ-க்கள் பெயரைக்கூட தெரிந்திருக்க முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம். கூவத்தூருக்கு அவர்கள் செல்லவில்லை என்றால், அவர்களுடைய பெயர்கூட நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு அவர்களுடைய செயல்பாடுகள் இருந்துள்ளது. சின்னத்துக்கும், நடிகர்களுக்கும் செலுத்துகிற வாக்கைத் தவிர்த்துவிட்டு, வேட்பாளரின் பெயரையும், அவர்களுடைய செயலையும் சிந்தித்து எப்போது நாம் வாக்களிக்கிறோமோ, அன்றுதான் சுதந்திரக் குடிமகனாக நமது கடமையை நாம் நிறைவேற்றியதாக அர்த்தம்" என்றார் அதிரடியாக.
 

.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக தொலைபேசி மூலம் எம்.எல்.ஏ-க்களை அழைக்கும் 'லைவ்'-க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் டி. ஜெயக்குமார், நிலோபஃர் கபில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களை அவர்களின் செல்போன் எண்களில் அழைத்தனர். அந்த அழைப்பை ஒருவர்கூட ஏற்கவில்லை. சிலர் அமைச்சர்களின் எண்களை உதவியாளர்கள் எடுத்துப் பேசினர். 'அமைச்சர் தண்ணீர்ப் பந்தல் திறப்பில் இருக்கிறார். அமைச்சர் ஆலோசனையில் இருக்கிறார்' என்று கூறிவிட்டு. தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர். எம்.எல்.ஏ-க்கள் போல் மாறுவேடமிட்டு வந்திருந்தவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களில் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க ஸ்டாலின் மற்றும் போடி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு மாற்றாக வந்து பங்கேற்ற எம்.எல்.ஏ-க்களிடம், "எட்டு நாட்கள் தனியார் விடுதியில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மக்கள் ஆதரவு இருந்ததா? தொகுதிப்பக்கம் போகிறீர்களா?" உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு எம்.எல்.ஏக்கள் திணறித் திணறி பதில் அளித்தனர். நகைச்சுவை உணர்வோடு நிகழ்ச்சி இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கு அந்தக் கேள்விகள் இடியாக இறங்கின. 

முகமூடி கிழிந்த எம்.எல்.ஏக்கள் !

இறுதியாக, பொதுமக்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் மொத்தம் 1,120 பேரிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 1,114 பேர் இந்த எம்.எல்.ஏ-க்கள் மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களித்திருந்தனர். மற்ற ஆறு பேர் மட்டுமே நம்பிக்கை உள்ளது என்று வாக்களித்திருந்தனர். தங்களின் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை இளைஞர்கள், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்தனர்.

-கே. புவனேஸ்வரி,
படங்கள்: சீனிவாசலு,
வீடியோ: தினகரன்
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close