வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (20/03/2017)

கடைசி தொடர்பு:19:50 (20/03/2017)

ஆர்.கே.நகர் மக்களின் பிரச்னை இது தான்? கவனிக்குமா கட்சிகள்

ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதி

ஆர்.கே.நகர் என்றாலே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியாகத்தான் இன்றும் அந்தப் பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, கடந்த 2015-ம் ஆண்டு, இதே தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு, 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில், உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றுவந்தபோது சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து, அவர் நின்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கயிருக்கிறது. ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, அக்கட்சி இரண்டாகப் பிரிந்திருக்கும் நிலையில், அந்த இரண்டு அணியினரும்... ''இரட்டை இலை சின்னத்தை மீட்போம்'' என்று சொல்லிக்கொண்டே தேர்தல் கமிஷன் பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள். பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மதுசூதனனும், சசிகலா தரப்பில் இருந்து டி.டி.வி.தினகரனும் இந்தத் தொகுதியில் களமிறங்க... ஒருபுறம், அவர்களுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், மற்றொரு புறம் தி.மு.க சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகிறார்கள். இதுதவிர, இன்னும் சில வேட்பாளர்கள் பட்டியலும் நீள்கிறது. இந்த முறை, பலமுனைப் போட்டியாகவும், பல வேட்பாளர்களைச் சந்திக்கும் தொகுதியாகவும் ஆர்.கே.நகர் இருப்பதால், தமிழக மக்களிடம் இதன் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில், அந்த தொகுதியைச் சேர்ந்த தண்டையார்பேட்டை பகுதி மக்களைச் சந்தித்தோம்.

தண்டையார்பேட்டை பகுதி மக்களின் ஒருமித்த கருத்தாக இருப்பது, முக்கியமாக மூன்று பிரச்னைகள் மட்டும்தான். ஒன்று, முதியோர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது, ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படுவது இல்லை. மூன்றாவது, தண்ணீர் பிரச்னை. இதுகுறித்து ஒரு மூதாட்டியிடம் பேசினோம், ''அம்மா, உயிருடன் இருந்தவரைக்கும் உதவித்தொகை குறிப்பிட்ட நாளுக்குள் சரியா வந்துடும். ஆனா, இப்போ அது வர்றதே இல்லை. போஸ்ட் ஆபீஸில் போய்க் கேட்டா, அவுங்க எந்தப் பதிலும் சொல்றதில்லை. அந்தப் பணத்தை வெச்சுத்தான் நாங்க பொழைப்பு நடத்தினோம். இனி, என்ன பண்ணப்போறோமோ தெரியலை. அதனால, எங்க பிரச்னையை கண்டுக்காத எவரும் இங்கே ஓட்டுக் கேட்டு வந்தா, நாங்க போடமாட்டோம். எல்லாரும் கொள்ளையடிக்கத்தான் பாக்குறாங்க. மக்களுக்கு நல்லது பண்றதுக்காக யாரும் அரசியலுக்கு வர்றதில்லை'' என்றார், காட்டமாக.

ஆர் கே நகர் தொகுதியில் தண்ணீர் பிரச்னை

''மூணு மாசமா இங்கே, பருப்பு, அரிசி, எண்ணெய் என எந்தப் பொருள்களும் வருவதும் இல்லை; வந்தாலும் வழங்குறதும் இல்லை. தினமும் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள், ரேஷன் கடை பொருள்கள் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. அதுவும் இப்போ சரியா கொடுக்காததால, கடையில் பணம் கொடுத்து அதிக விலைக்கு வாங்க வேண்டியிருக்கு. இதனால நாங்க சம்பாதிக்கிற காச இப்படி அதிகமா பணம் கொடுத்து வாங்குற பொருள்களேயே போயிடுது. மத்த செலவுக்குக் காசில்லாம கஷ்டப்படுறோம். ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வந்தா எங்க வாழ்க்கை நல்லா அமையும்" என்கிறார் ஒரு பெரியவர், ஏக்கமுடன்.

''இங்கே குடிக்க தண்ணி சரியாகவே கிடைப்பதில்லை. கிடைக்குற தண்ணியும் சுத்தமா இருக்குறது இல்லை. இங்கே குடிக்கிற தண்ணியுடன் காவாதண்ணியும் கலந்து வருது. இதனால வசதி குறைவானவங்க பணம் செலவுசெய்ய முடியாம அதையே குடிக்கும் நிலை ஏற்படுது. காசு இருக்குறவங்க கேன் தண்ணி வாங்கிக் குடிக்கிறாங்க. கேன் தண்ணியைக் குடிக்க வெச்சுக்கிட்டாலும், சமைக்கிறதுக்கும் மத்த தேவைகளுக்கும் காவாதண்ணி கலந்துவர்ற தண்ணியைத்தான் பயன்படுத்துறோம். அதனால, சீக்குத்தான் வருது. இதுக்கு எந்த அரசியல்வாதிகளும் தீர்வுகாணுறது இல்லை'' என்கிறார், ஏரியாவாசி ஒருவர்.

இதைத் தவிர்த்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் பேசியபோது, "இந்தப் பிரச்னை எல்லாமே, இங்கே பொதுவா இருக்கு. இதை, அரசியல்வாதிங்க முதல்ல தீர்க்கணும். எங்களுக்கு இலவசம்னு எதையும் கொடுக்காம, வீட்டுல படித்த ஒருவருக்கு வேலை வழங்கணும். இங்கே படிச்சவங்க நிறையப் பேர் இருக்காங்க. அவுங்க படிச்ச படிப்பு வேலை எதுவுமில்லை'' என்றார். 

ஆர்.கே நகர் இடைத் தேர்தல்

இறுதியில், மக்களிடம் பிரச்னைகளைக் கேட்ட நாம், ''தற்போதைய இடைத்தேர்தலில் உங்கள் ஓட்டுக்கு யாருக்கு'' என்று கேட்டோம். ''இந்தப் பிரச்னையெல்லாம் முழுசாய் தீர்க்குறவங்களுக்கே எங்க ஓட்டு'' என்றனர், சிலர். வேறு சிலரோ, "யார் வந்தா என்ன? அவுங்களுக்குத் தேவையான பணத்தைக் கொள்ளையடிச்சிட்டுப் போகப் போறாங்க. அவுங்களுக்கு மக்கள் மீது ஒருபோதும் அக்கறை இருக்காது. அதனால, நாங்க ஏற்கெனவே யாருக்கு ஓட்டுப் போடணும்னு முடிவு செஞ்சி வெச்சிருக்கோம்'' என்றனர்.

இதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகப் புரிகிறது. 'இங்கு, எந்தத் தலைவர் வந்தாலும் அவர்கள் பிரச்னையைத் தீர்ப்பவராக இருக்க வேண்டும். பணம் பட்டுவாடா நடந்தாலும் மக்கள் தங்கள் தொகுதிக்கு யார் தலைவர் ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்' என்பதே அது.

ஒரு முன்னாள் முதல்வரின் தொகுதியிலா இவ்வளவு மோசமான நிலைமை நிலவுகிறது?

- நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்