வெளியிடப்பட்ட நேரம்: 07:37 (21/03/2017)

கடைசி தொடர்பு:07:37 (21/03/2017)

“மதுரையில் மாணவர்களை குறிவைக்கும் கும்பல்!” பெற்றோர்களே உஷார்

கொலைகள்

சில நாட்களுக்கு முன்பு மதுரை மஹால் பகுதியில் ப்ளஸ் டூ மாணவர் செல்போனுக்காகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்வேறு கனவுகளுடன் வலம்வந்த மாணவன் நாகராஜ், திடீரென்று கொலையாகிப்போனதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

மதுரையின் மையத்தில் பரபரப்பான மஹால் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் குமரேஷ் பாபு. இவரது மகன் நாகராஜ். இவர், பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது... அவரை, வழிமறித்த மூன்று பேர், அவரது செல்போனைப் பிடுங்கிக்கொண்டு கையிலும் தொடையிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள அந்தப் பகுதியில் அன்று யாரும் இல்லாதது கொலைகாரர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. செல்போனைத் திருடியவர்கள், அதிலிருந்த சிம்மைக் கழட்டிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். அந்தச் சிம்மை எடுத்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய செல்லில் போட்டு நாகராஜின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகு, நாகராஜை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் காப்பாற்ற முடியவில்லை.

செல்போன் போன்ற அற்ப விஷயங்களுக்காக ஏதுமறியாத அப்பாவிகள் கொலை செய்யப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதுரையில் பல பகுதிகளில் யாரும் தனியாகவோ, ஜோடியாகவோ செல்லமுடியாத நிலை, செயின் பறிப்பவர்கள், செல்போன், பணம் பறிப்பவர்கள் என்று திடீரென்று வந்து தங்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். கழுத்தில்கிடக்கும் செயினைப் பறிப்பதற்காக உயிரைப் போக்கும் கொடூரங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. தொழில்ரீதியான திருடர்கள் என்று இல்லாமல், பொழுதுபோக்காகத் திருடுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இது மட்டுமல்லாத மது குடிக்கவும், கஞ்சா அடிக்கவும் போதைக்கு அடிமையான பலர் வழிப்பறியில் இறங்கிவிடுகிறார்கள். பணத்தைப் பறிகொடுக்கும் பலர், போலீஸிடம் தகவல் சொல்லாமலேயே மறைத்துவிடுகிறார்கள். இதுவே, வழிப்பறிக்காரர்களுக்குத் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட வசதியாகப் போய்விடுகிறது.

நாகராஜ் கொலை வழக்கில், மதுரை மாநகர காவல் துறை விரைவாக விசாரணையைத் தொடங்கியது. இதில், மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் உட்பட மூன்று பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் இளஞ்சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்தது பற்றி மாநகர காவல் துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘’நாகராஜை வழிமறித்த அந்த மூன்று பேரும், 'அவசரமாகப் பேச வேண்டும்; உன் போனைக் கொடு' என்று கேட்டுள்ளனர். 'தனது போனில் பேலன்ஸ் இல்லை' என்று நாகராஜ் சொல்ல... 'தங்களுடைய சிம்கார்டில் பேலன்ஸ் உள்ளது, ஆகையால், அதைப் போட்டுப் பேசிவிட்டு பிறகு போனைத் தருகிறோம்'' என்று சொல்லி அவரிடமிருந்து போனை வாங்கியுள்ளனர். பேசி முடித்தபின்பு, போனை நாகராஜிடம் கொடுக்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களிடம் போனைத் திரும்பக் கேட்டபடி நாகராஜ் பின்தொடர்ந்துள்ளார். அதனால், அவர்கள் நாகராஜைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இவர்களின் நெருங்கிய நண்பருக்கு போன் தொலைந்துவிட்டதால், அவர், இந்த மூவரிடமும் செல்போன் ஒன்றைக் கேட்டுள்ளார். இதற்காக மூவரும் திட்டமிட்டு நாகராஜின் செல்போனைப் பறித்ததாகக் கூறியுள்ளனர். மூவரில் இருவர் மீது மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெற்றோர் கண்காணிப்பு இல்லாததாலும், தவறானச் சேர்க்கையாலும் சிறுவயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்’’ என்றவர் மற்றோர் அதிர்ச்சி தகவலையும் மீடியாக்களிடம் பகிர்ந்துகொண்டார்.  

‘’மதுரையைப் பொறுத்தவரை, 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு முதல் இன்றுவரை பதிவான 32 வழக்குகளில் 52 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வருத்தமான விஷயம். சிறுவயதில் குற்றம் செய்வோரைத் தடுக்க விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். நாங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். கல்வி நிறுவனங்களும், பெற்றோரும் கவுன்சிலிங் மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். குற்றங்களைத் தடுக்க மதுரையில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொறுத்த உள்ளோம்’’ என்றார்.

இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே மதுரை யானைக்கல்லில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சாலையில் சரவணக்குமார் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார், அப்போது டூவீலரில் வந்த இருவர், அவரிடம் பணம் கேட்டுள்ளனர். 'இல்லை' என்றதும், கத்தியைக்காட்டி அவருடைய செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். உடனே போலீஸுக்குத் தகவல் சொன்னதும் அந்தக் குற்றவாளிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு வயது 20, மற்றொருவருக்கு 16. இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. சிறார்கள், மாணவர்கள் எப்படிக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று விசாரித்தால் அதிர்ச்சியான தகவல்கள்தான் கிடைக்கின்றன. ‘’பள்ளி மாணவர்கள் அல்லது கல்வியைப் பாதியில்விட்ட மாணவர்களைத் தங்களுடைய குற்றச் செயல்களுக்கு நகரின் முக்கிய ரவுடிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்தந்த ஏரியாவில் வலம்வரும் ரவுடிகள் சிறுவர்களைக் குடிக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாக்கிவிடுகிறார்கள். அவர்களுடையச் செலவுக்கு பணம்கொடுத்து குற்றங்களில் ஈடுபடுத்தி வருகிறார்கள். ஏதாவதொரு வழக்கில் சிக்கிச் சிறைக்குச் சென்றால், அவர்களை வெளியில் எடுத்து முழுநேர குற்றவாளியாக்கிவிடுகிறார்கள். இதுபோன்று குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் ஆடம்பர கெட்டப்புகளைப் பார்த்து, நல்லவிதமாக இருக்கும் பொதுவானச் சிறார்களும் தவறுகள் செய்யத் துணிந்துவிடுகிறார்கள். செயின் ஸ்நாச்சிங்கில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள் என்ற தகவலை காவல் துறையினர் சொல்கிறார்கள். நவீன செல்போன் வாங்கவும், ஆடம்பரமாக வாழவும், ஜாலி டூர் செல்லவும், குடிக்கவும் பணத்துக்காகச் சங்கிலி பறிப்பது, பணம் பறிப்பது போன்ற காரியங்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களில் மிகவும் தீவிரமாகச் செயல்படுகிறவர்கள் அடுத்தடுத்து பெரிய குற்றங்களில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறார்கள். சிலருக்கு சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் துணை செய்கின்றன.

தங்கள் பிள்ளைகள் மீது அதிகமான பாசம் வைத்தாலும், அவர்களின் செயல்பாட்டில் வித்தியாசம் தெரிகிறதா என்பதையும், அவர்களிடம் பணம் புழங்குகிறதா என்பதையும், நாம் வாங்கிக் கொடுக்காமல் காஸ்ட்லியான பொருட்கள வைத்திருக்கிறார்களா என்பதையும் பெற்றோர்கள் காண்கானிக்க வேண்டும். காவல் துறையும், மாநகரின் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளிலும் கவுன்சிலிங், மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்த வேண்டும்.

இளஞ்சிறார்களைத் தீயச் செயல்களில் ஈடுபடுத்துவோரை முதலில் தண்டிக்க வேண்டும்.

- செ.சல்மான்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்