“என்னை கொன்னுடுங்கண்ணே..!" கதறிய இளைஞர்... கல்லாகி நின்ற அதிகாரிகள் | This Is How Dharmapuri District Administration reacted to a needy call

வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (21/03/2017)

கடைசி தொடர்பு:17:50 (22/03/2017)

“என்னை கொன்னுடுங்கண்ணே..!" கதறிய இளைஞர்... கல்லாகி நின்ற அதிகாரிகள்

தர்மபுரியில் ஆதரவற்று கிடந்த இளைஞன்

ந்தச் செய்தியை எழுதுவதற்கே நடுக்கமாக இருக்கிறது. “என்னை இப்படியே விட்ருங்கண்ணே, என்னால முடியல! லாரியில அடிபட்டு நான் சாகுறேண்ணே...” என்று அந்த ஜீவன் கதறியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. "அவர் குடிச்சிருக்காரா? சமூக நலத்துறையில, இப்ப ஆள் இருக்க மாட்டாங்க சார். உங்களுக்கு தெரியாததா?" என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக பேசியவரின் குரல் நம்மை ஏதோ செய்தது. எப்போதுமே அதிகார குரலுக்கும், ஆதரவற்ற கதறலுக்கும் மத்தியில் நாம் ஒரு ஜடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தோடு இங்கே இதனை பதிவிடுகிறோம். 

மார்ச் 19, ஞாயிறு அன்று இரவு 9.20 மணி. தர்மபுரி நெசவாளர் காலனி. சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். இரண்டு பழம் வாங்கிக் கொண்டு போகலாம் என்று பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த வாழைப்பழ வண்டியை நோக்கி நடந்தோம். பக்கத்திலேயே இருந்த பானிபூரி கடைக்கு, ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். பானிபூரி கடைக்கும், வாழைப்பழ வண்டிக்கும் நடுவில் சாலையில், சாக்கு மூட்டையில் கட்டிப் போட்டதைப்போல ஒரு உருவம் கவிழ்ந்து கிடந்தது. அந்த வழியாகச் செல்வோர் அனைவரும் அந்த மனிதனை சற்றும் பொருட்படுத்தாமல் கடந்துசென்று கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் உடலில் அசைவேதும் இல்லை. இடுப்புக்குக் கீழ் வெறும் துணிகள்தான் சுற்றப்பட்டிருந்தன. கொஞ்சம் காசும், ஒரு வாழைப்பழமும் அவருக்கு அருகில் கிடக்கிறது.  "மனுஷன் செத்துட்டான் போல" என்று மனசு பதைபதைக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த நபர்பற்றி, வாழைப்பழ வண்டிக்காரரிடம் கேட்டதற்கு, “அரைமணி நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர், வாழப்பழம் வாங்கிக் கொடுத்தார் தம்பி. அதை அவர் சாப்பிடவே இல்லை. அப்படியே கவிழ்ந்துட்டான். என்னன்னே தெரியல" என்றார். "என்னண்ணே சொல்றீங்க?" என்று கூறியபடியும், பதறி அடித்துக்கொண்டும் ஓடி, அந்த நபருக்கு அருகில் சென்றோம். "அண்ணே...அண்ணே..." என்றழைத்தபடி முதுகைப் பிடித்து அசைத்தபோதிலும், அவரிடம் எந்த அசைவும் இல்லை. கொஞ்ச நேரம் கழித்து, 'விட்ருங்கண்ணே.. தொடாதீங்கண்ணே. இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப்போறேன். என் நாடி கட்டாகிருச்சுண்ணே' என்று அவர் முனகினார். நமக்கு கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து, உடல் வெடவெடத்துப் போய்விட்டது. படபடப்போடு அங்கிருந்தபடியே மாவட்ட கலெக்டர் விவேகானந்தனுக்கு போன் போட்டோம். 'தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. தங்கள் குறைகளைப் பதிவுசெய்ய 1077 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். நன்றி' என்று பதிவு செய்யப்பட்ட குரல் தொடர்ந்து, ஒலித்துக் கொண்டிருந்ததே ஒழிய அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. உடனடியாக 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்றவர், சன்னமான குரலில், "வணக்கம் சார், தர்மபுரி கலெக்டரேட்" என்றார். 

"சார் வணக்கம், நான் ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டர் பேசுறேன். ஹரி தியேட்டர் எதிர்ல நெசவாளர் பஸ் ஸ்டாப்கிட்ட, ரோட்ல ஒரு ஹேண்டிகேப்ட் விழுந்து கிடக்குறார். பாக்கவே பரிதாபமாக இருக்கு. அவரால நடக்க முடியுமான்னுகூட தெரியல. வாகனம் எதிலாவது அடிபட்ருவார் போலிருக்கு சார். நாங்க இங்கயே வெயிட் பண்றோம் கொஞ்சம் யாரையாச்சும் வரச் சொல்லுங்க சார்" என்றோம்.

பதிலுக்கு நம்மிடம் பேசியவர் மிக சாவகாசமாக, "இல்லை சார். டிரிங்ஸ் அடிச்சிருக்காரா?" எனக் கேட்டார். "இல்லை. இல்லை சார்... ஹேண்டிகேப்ட் சார். முடியாம விழுந்து கிடக்குறார் சார். டிரிங்ஸ் அடிச்சிருந்தார்னா நாங்க ஏன் சார் உங்களுக்கு போன் பண்ணப்போறோம்.?"

"சரி. 108-க்கு போன் பண்ணுங்க சார். ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகணுமா? இல்ல வீட்டுக்கா?"

"சார், அவரு ஆதரவற்ற ஆள் சார்" 

"சோஷியல் வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட்ல இந்த நேரத்தில யாரும் இருக்க மாட்டாங்களே சார். உங்களுக்கு தெரியாதது ஒண்ணும் கிடையாது" என்று அவர் பதில் சொன்னதும், நமக்கு ஆத்திரம் தாங்கவில்லை. 

"அப்புறம், எதுக்கு சார். சோஷியல் வெல்ஃபேர் துறை இருக்கு? நீங்கள் சொன்னதை அப்படியே பதிவு பண்ணட்டுமா.?" என்று கேட்டதற்கு...

"சோஷியல் வெல்ஃபேர் எதுக்கு இருக்குன்னு, நீங்க கேள்வி கேட்கக் கூடாது, சரிங்களா?" என்றார் அழுத்தமாக. 

"சார். ஒரு உயிர் ஆபத்தான் நிலையில ரோட்டுல கெடக்குது, என்ன ஆச்சுன்னே தெரியல. அதுக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னா, நீங்க ரொம்ப அசால்டா பதில் சொல்றீங்க"

"நானா அசால்டா பேசறேனா? ஹரி தியேட்டருக்கு பக்கத்திலதானே. அதுக்கு, ஆல்டர்னேட் ஏற்பாடு பண்ணி ஆட்களை வரச்சொல்றேன்"  என்று பதில் சொன்னார். 

"சரி சார். சீக்கிரம் வரச் சொல்லுங்க" என்று போனை துண்டித்துவிட்டு காத்திருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து  வண்டியில் வந்த ஒருவர், 'என்ன, ஏது?' என்று விசாரித்தார். 

'சார்  நீங்க?' 

'நான் போலீஸ்'.

“வாங்க சார். கலெக்டரேட்ல இருந்து வரச் சொன்னாங்களா சார்? நான்தான், போன் பண்ணினேன். விகடன் ரிப்போர்ட்டர். இவரு ரொம்ப நேரமா ரோட்டுல கெடக்குறார். பாவமா இருக்கு சார்”.

"நான் கலெக்டரேட்ல இருந்தெல்லாம் வரல சார். இந்த வழியா போய்க்கிட்டு இருந்தேன். கூட்டமா நின்னதப் பார்த்து நிறுத்தினேன். சி.ஆர்.பி.எஃப்ல இருக்கேன்" என்றவரிடம், "கலெக்டரேட்டுக்கு பேசியிருக்கோம். ஆள் அனுப்புறேன்னு சொன்னாங்க அதுதான் சார். மீண்டும் பேசிப் பாருங்க" என்றார்.

மறுபடியும் 1077-க்கு அழைத்தால் நம் அழைப்பை ஏற்கவே இல்லை  (24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் சேவை எண்ணின் நிலை இதுதான்).

அந்த போலீஸ்காரரோடு சேர்ந்து அவரைத் தூக்கி, உட்கார வைத்தால், "விட்ருங்கண்ணே. நான் லாரில அடிபட்டுச் செத்துடுறேன். என்னால முடியலைண்ணே" என்று சத்தமாகக் கத்தினார். "உனக்கு என்னய்யா பண்ணுது. ஹாஸ்பிடல் போவோமா?" அந்த போலீஸ்காரர் கேட்டார்.

 "அய்யய்யோ, ஆஸ்பத்திரியெல்லாம் வேணாம்ணே. என்மேல ரயில் ஏறிடுச்சுண்ணே. என்னை ப்ளூ ஊசிபோட்டு கொன்னுருங்கண்ணே" என்று அழ ஆரம்பித்தார். அவரைப் பேசவைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று.

அந்த போலீஸ்காரர் உதவியுடன் சாலையிலிருந்து நகர்த்தி ஒரு மர நிழலில், படுக்க வைத்துவிட்டு வீடு திரும்பினோம். கடைசி வரை மாவட்ட நிர்வாகத்தின் சேவை எண்ணில் இருந்து திரும்ப அழைக்கவே இல்லை. 

இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு மறுநாள் (திங்கள் கிழமை) போன் செய்தபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவே இல்லை.  இதுவே அரசின் சமூக நலத்துறையினர் செயல்படும் அவலநிலை.

 

'என்னை கொன்னுடுங்கண்ணே...!' என்று சொன்னவர் இப்போது எப்படி இருக்கிறார்...? #FollowUp


-எம்.புண்ணியமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்