ஜாமீனில் வெளிவந்த 3-வது நாளில், சேகர்ரெட்டி மீண்டும் கைது! | shekhar reddy again arrested in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 00:56 (21/03/2017)

கடைசி தொடர்பு:08:29 (21/03/2017)

ஜாமீனில் வெளிவந்த 3-வது நாளில், சேகர்ரெட்டி மீண்டும் கைது!

புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த காரணத்தினால், சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சேகர் ரெட்டி, கடந்த 17-ம் தேதி ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை, நேற்று (20-3-17) அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பின்னர், விசாரணை முடிந்து சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைதுசெய்தது. சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் ஜாமீன் வேண்டி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மற்ற யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதன்பிறகு சி.பி.ஐ.நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி, பிரேம் குமார், சீனிவாசலு ஆகிய மூவரும் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி ஜாமீனில் வெளிவர உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று (20-3-17) காலை சேகர் ரெட்டி சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்துப் போட வந்தார். அப்போது, உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி, சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர். சுமார் 11 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின் இறுதியில் சேகர் ரெட்டி, அமலாக்கத்துறையினரால்  கைதுசெய்யப்பட்டார்.

சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டி தற்போது இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.