பன்னீர்செல்வம் அணியில் அதிருப்தி அமைச்சர்?! - கட்டம் கட்டியதன் விளைவு #VikatanExclusive

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன்

பன்னீர்செல்வம் அணியில், அமைச்சர் ஒருவர் விரைவில் சேர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த அமைச்சரை கட்சித்தலைமை கட்டம் கட்டியதால், ஏற்பட்ட அதிருப்தியால் இந்த முடிவை அவர் எடுத்ததாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல், சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரித்துவிட்டது. இவர்கள், இரு அணிகளாகச் செயல்பட்டுவருகின்றனர். இருப்பினும், சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா, சிறைக்குச் சென்றுவிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், செங்கோட்டையனுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நிதித்துறை உள்ளிட்ட சில துறைகள், அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க.       எம்எல்ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதனால், கட்சித் தலைமை மீது சில எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
இதுவரை ஆறு எம்எல்ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.  இந்த நிலையில், அமைச்சரவையில் உள்ள ஒருவரை கட்சித் தலைமை கட்டம் கட்டியுள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால், அவர் அதிருப்தியில் உள்ளதாக அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் நம்மிடம் பேசுகையில், "கட்சிக்காக அண்ணன் உழைத்ததைப் பார்த்து ஜெயலலிதாவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். தேர்தலில் வெற்றிபெற்றதும், முக்கியமான துறையை அவருக்கு ஜெயலலிதா கொடுத்தார். இது, அவரது எதிரணியில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால், அண்ணன் மீது தேவையற்ற புகார்களை கட்சித் தலைமைக்கு அனுப்பினர். இருப்பினும், அதையெல்லாம் ஜெயலலிதா நம்பவில்லை. அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக அண்ணனது துறையை அவர் மாற்றினார். ஜெயலலிதாவின் நம்பிக்கையை அண்ணன் இதுவரை காப்பாற்றிவருகிறார். கட்சிக்கு விசுவாசமாகச் செயல்பட்டுவருகிறார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்கு விசுவாசமாகவே இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அண்ணனை அழைத்த போதுகூட அவர் செல்லவில்லை. சசிகலா, சிறைக்குச் சென்ற பிறகு, டி.டி.வி.தினகரனிடம் கட்சித் தலைமை கொடுக்கப்பட்டுள்ளது. தினகரனின் வலதுகரமாக, பெருமாள் பெயரைக் கொண்ட ஒருவர் இருக்கிறார். பெருமாள் பெயரைக் கொண்டவருக்கும் அமைச்சருக்கும் ஆரம்ப காலத்திலிருந்தே கருத்துவேறுபாடு இருந்துவருகிறது. டி.டி.வி.தினகரனிடம் அமைச்சரை ஓரம்கட்ட அவர் சொல்லி இருக்கிறார். அதன்படி அமைச்சரை ஓரங்கட்டும் வேலையில் கட்சித் தலைமை ஈடுபடத் தொடங்கியதால், அண்ணன் அதிருப்தியில் உள்ளார். இந்தத் தகவலை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அண்ணனிடம் சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஆனால், அண்ணன் இதுவரை எதுவும் முடிவுசெய்யவில்லை. தொடர்ந்து கட்சித்தலைமை அமைச்சரை ஓரங்கட்டினால், நிச்சயம் மாஃபா.பாண்டியராஜனைப்போல அண்ணனும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச்  செல்ல வாய்ப்புள்ளது" என்றனர். 

இதுகுறித்து கட்சித் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவருகிறார். இருவருக்கும் தொழில்ரீதியாக நட்பு உள்ளது. அமைச்சர், மாநகராட்சியில் முக்கியப் பதவி வகித்த சமயத்தில், முன்னாள் அமைச்சர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். இதனால், இருவரும் பல டீலிங்கில் ஈடுபட்டதாகத் தகவல் உள்ளது. முன்னாள் அமைச்சரின் உறவினர், டாக்டராக இருக்கிறார். அமைச்சரும் அந்த உறவினரும் வாரந்தோறும் சந்தித்துப் பேசுகின்றனர். இந்தத் தகவல், கட்சித் தலைமைக்குத் தெரிந்ததும் அமைச்சரை அழைத்துப் பேசினோம். அதன் பிறகும் அவர் அந்த நட்பை விடவில்லை. தற்போது, கட்சித் தலைமை ஓரங்கட்டுவதாகச் சொல்கிறார். நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கட்சித்தலைமை மீது அமைச்சர் தரப்பு சொல்கிறது. ஜெயலலிதா, உயிரோடு இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால், இன்றைய சூழ்நிலை காரணமாக நடவடிக்கை எடுக்க காலதாமதமாகிறது" என்றார். 

 - எஸ்.மகேஷ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!