வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (21/03/2017)

கடைசி தொடர்பு:13:05 (21/03/2017)

' அகிலேஷ் நியாயங்கள் சசிகலாவுக்குப் பொருந்தாதா?'  -எம்.பிக்களிடம் தகித்த தினகரன் 

சசிகலா - தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ' இரட்டை இலைச் சின்னத்துக்கு உறுதியான முடிவை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது. இதன் பின்னணியில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது" எனக் கொந்தளிக்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது ஆர்.கே.நகர்த் தொகுதி. ' 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என நம்பிக்கையோடு பேட்டி அளித்தார் அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரன். ' மண்ணின் மைந்தன் மதுசூதனனே வெற்றி பெறுவார்' என்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ' அம்மாவின் உண்மையான வாரிசு நான்தான். தேர்தலில் வெற்றி பெற்று கட்சியையும் கைப்பற்றுவேன்' என்கிறார் தீபா. ஒரே கட்சியை குறிவைத்து மூன்று முனைத் தாக்குதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தொகுதிக்குள் வலம் வருகிறார் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ். " தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை கடந்த 15-ம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் பன்னீர்செல்வம். அந்த மனுவில், ' அ.தி.மு.கவின் சட்டவிதிகளில் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி என்பதே கிடையாது. கட்சி விதிப்படி அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே அவர் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

"இதற்குப் பதிலடியாக நாங்களும் தேர்தல் ஆணையரை சந்தித்தோம். ' சசிகலாவை முன்மொழிந்தவர்களே எதிர்க்கின்றனர். அவர்களது கோரிக்கை மனுவை நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தோம்.இதையடுத்து, ஆதரவை உறுதி செய்யும் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 11 எம்.பிக்கள், 12 எம்.எல்.ஏக்கள் உள்பட  அவரது ஆதரவு நிர்வாகிகள் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளனர். ' இவர்களது பிரமாண பத்திரம் எந்த வகையிலும் செல்லுபடியாகாது' என்பதை உறுதி செய்யும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து 122 எம்.எல்.ஏக்கள் மற்றும் சசிகலா ஆதரவு எம்.பிக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதம் ஆகியவற்றை பிரமாண பத்திரமாக இன்று தாக்கல் செய்ய இருக்கிறோம். வானகரம் பொதுக்குழுவில் சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.கவில் இருந்து பன்னீர்செல்வத்துடன் சென்ற நிர்வாகிகளைத் தவிர, மீதமுள்ள அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதல் கடிதம், அ.தி.மு.கவின் துணை அமைப்பில் உள்ள செயலாளர்களின் கடிதம் ஆகியவற்றையும் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளோம். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களைவிட, 'நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

ஓ.பன்னீர்செல்வம்

" உத்தரபிரதேசத்தில் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையில் மோதல் வெடித்தது. கட்சிக்கு உரிமை கொண்டாடி இரு தரப்பினரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினர். 'எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையினர் யார் பக்கம் இருக்கிறார்கள்?' என்பதைப் பார்த்து, இரண்டே நாளில் முடிவை அறிவித்தது தேர்தல் ஆணையம். ஆனால், சசிகலா விவகாரத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் அவர் பக்கம் இருந்தும் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்திக்கொண்டே வருகிறது. இதன் பின்னணியில் பா.ஜ.கவின் மத்திய அமைச்சர்கள் சிலர் உள்ளனர். அவர்கள்தாம் ஆணையத்தை நெருக்குகின்றனர். இத்தனைக்கும் தலைமைத் தேர்தல் ஆணையராக நஜீம் ஜைதி நியமிக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர் ஜெயலலிதா. ஆணையத்தின் துணை ஆணையராக உள்ள சந்தீப் சக்சேனாவும் கார்டனுக்கு நெருக்கமானவர்தான். அப்படி இருந்தும் சின்னத்தை ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமே பா.ஜ.கதான் என்பதை உறுதியாக அறிகிறோம். இருப்பினும், 'சின்னம் கிடைக்கும் வரையில் பொறுமையாக இருப்போம்' என அறிவுறுத்தியிருக்கிறார் தினகரன். ' மிகச் சாதாரண ஒரு விஷயத்தை வேண்டுமென்றே சென்சிடிவ்வாக மாற்றுகிறது பா.ஜ.க' எனவும் எம்.பிக்களிடம் கொதிப்போடு பேசினார். நாளைக்குள் சின்னம் உறுதியாகக் கிடைத்துவிடும் எனவும் நம்புகிறார்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

" சசிகலாவின் நியமனம் மட்டுமல்ல, தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்த்ததே சட்டவிரோதமானதுதான். அப்படி இருக்கும்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே செல்லாது. பெரும்பான்மையான அ.தி.மு.க தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். பொதுக்குழுவில் நிர்வாகிகளை நிர்பந்தப்படுத்தித்தான் தற்காலிகமாக பதவிக்கு வந்தார் சசிகலா. கட்சி விதிகளின்படி முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டால், அவரோ அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களோ பதவிக்கு வர முடியாது. அதைப் புரிந்து கொண்டுதான் தேர்தல் ஆணைய அதிகாரிகளை வளைக்கும் முயற்சியில் தினகரன் இறங்கியிருக்கிறார். 'நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என்பதை மக்கள் அறிவார்கள். ஆணையத்தில் நாங்கள் சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரங்களின் மூலம், எங்கள் கைகளுக்கு இரட்டை இலைச் சின்னம் வந்து சேரும். ஆர்.கே.நகர்த் தேர்தலோடு தினகரனின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வரப் போகிறது" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

ஆர்.கே.நகர்த் தொகுதியில் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இருக்கிறது. சின்னத்தை வேண்டுவோர் கட்சியின் அதிகாரபூர்வ தலைவர் அளிக்கும் பி படிவத்தை இணைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எந்த முடிவுக்கும் வராவிட்டால், இரட்டை இலைச் சின்னத்தில் தினகரனும் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும். ' இப்படியொரு சிக்கல் ஏற்படுவதைத்தான் மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் விரும்புகிறது' எனக் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். 

-ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்