வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (21/03/2017)

கடைசி தொடர்பு:14:00 (21/03/2017)

டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர் வழக்கு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க தொண்டர் ஒருவர் மனு தாக்கல்செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரனும், தி.மு.க சார்பில் மருதுகணேஷும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், தே.மு.தி.க சார்பில் மதிவாணனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டு உதயமும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர் ஜாேசப் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். சிறைத்தண்டனையாக இல்லாமல் அபராதம் செலுத்திவருவதும் தண்டனையின் ஒருபகுதிதான். இதனால், அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.