வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (21/03/2017)

கடைசி தொடர்பு:13:56 (21/03/2017)

சிங்கப்பூர் குடியுரிமை விவகாரம்... டி.டி.வி.தினகரன் ஆவேசம்!

நானும் இந்த மண்ணின் மைந்தன்தான்; நானென்ன ஆப்கானிஸ்தானில் இருந்தேனா என்ன? என ஆவேசமாகக் கூறினார், டி.டி.வி.தினகரன்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க தொண்டர் ஜோசப் என்பவர் மனு தாக்கல்செய்துள்ளார். மேலும், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்றும் டி.டி.வி.தினரகன் மீது புகார் கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், இரட்டை இலைச் சின்னம்  தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணை முடிவில் எங்கள் தரப்புதான் வெற்றிபெறும்.
95 சதவிகித உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், நாங்கள்தான் வெற்றிபெறுவோம். சட்டப்படி வேட்புமனு ஏற்கப்பட்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன். ஓரிரு நாளில், தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.

சிங்கப்பூர் குடியுரிமை குறித்த கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், நானும் இந்த மண்ணின் மைந்தன்தான்; நானென்ன ஆப்கானிஸ்தானில் இருந்தேனா என்ன? என ஆவேசமாகக் கூறினார்.

மேலும், ஊழலின் ஒட்டுமொத்த உருவமே தி.மு.க.தான்; மு.க.ஸ்டாலின் கூறுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.