Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆர்.கே.நகரில் 100 கோடி ரூபாய் விநியோகம்!' - தினகரன் மீது சீமான் குற்றச்சாட்டு

சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கலைக்கோட்டுதயம் போட்டியிட இருக்கிறார். ' தொகுதியில் வாக்குக்கு பத்தாயிரம் என வாரியிறைத்து வெற்றியைக் கைப்பற்றத் திட்டமிட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். மக்கள் பிரச்னைகளை முன்வைத்துக் களத்தை எதிர்கொள்கிறோம்' என்கிறார் சீமான். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரனும், தி.மு.க வேட்பாளராக மருது கணேஷும், தே.மு.தி.க சார்பில் மதிவாணமும், சி.பி.எம் சார்பில் லோகநாதனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் பிரசார வேகத்தைக் கூட்டத் தொடங்கிவிட்டன. இவ்வளவு நாட்கள் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த சீமான், இன்று காலை வேட்பாளரை அறிவித்துவிட்டார். சீமானிடம் பேசினோம். "எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக கலைக்கோட்டுதயம் இருக்கிறார். கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் தமிழ், தமிழர் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார். இதற்கு முன்னால் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவற்றில் அவர் பணிபுரிந்ததற்கும் இந்த உணர்வுதான் அடிப்படையாக இருந்தது. 2009-ம் ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலைக்குப் பிறகு எங்கள் கட்சியில் இணைந்தார் கலைக்கோட்டுதயம். ஈழப் போராட்டக் காட்சிகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஆர்.கே.நகரில் அவர் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்தோம்" என விவரித்தவர், 

தினகரன்"ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எப்படியிருந்தாலும் களத்தில் இறங்கித்தான் ஆக வேண்டும். இந்தத் தேர்தலில் பணம்தான் பிரதானமாக இருக்கப் போகிறது. அரசியல் கட்சிகளும் பணத்தை மட்டுமே நம்பியுள்ளன. இவர்களிடம் உண்மை, நேர்மை, சத்தியம், கொள்கை என எதுவுமே இல்லை. பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலை பேசத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க சார்பில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. அப்படிப் பார்த்தால் ஒரு லட்சம் வாக்குகளுக்கு நூறு கோடி ரூபாய் வரை விநியோகிக்க இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்தத் தொகையெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. நாங்கள் அப்படியில்லை. பண நாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை மலர வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை. நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தொகுதிப் பிரச்னைகளை எங்களால் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதைத் தேர்தல் பரப்புரையில் வெளிப்படுத்த இருக்கிறோம். மக்கள் மனதில் நல்ல அரசியலை விதைப்பதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பயன்படுத்திக் கொள்கிறோம். 'உங்களில் இருந்தே ஒருவர் வேட்பாளராக வந்திருக்கிறார்' என்பதை மக்களிடம் அடையாளம் காட்ட, எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகத்தான் இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். இங்குள்ள மீனவ மக்கள், வர்த்தகக் பெருமக்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கள வேலைகளில் தீவிரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டோம். மாநிலம் முழுவதும் மொத்த தொகுதியிலும் போட்டியிட்டவர்கள் நாங்கள். இந்த ஒத்தைத் தொகுதியை விட்டுவிடுவோமா?'' என்றார் பலத்த சிரிப்போடு. 

"ஆர்.கே.நகரில் பணத்தைக் கொட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தலை வேலை செய்து வருகிறோம். பி.வி.ரமணா, தாம்பரம் சின்னையா உள்ளிட்டோர் வீடு வீடாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே களமிறங்க இருக்கிறார். மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்டு வருகிறோம். எங்களைப் பற்றி மக்கள் மனதில் தவறான எண்ணத்தைப் பதிய வைக்கும் வேலையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கெல்லாம் பதில் அளித்து நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை" என்கின்றனர் வடசென்னை அ.தி.மு.க நிர்வாகிகள். 

- ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close