டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளிடம் ஜெட்லி அளித்த வாக்குறுதி

மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் தமிழக விவசாயிகள் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசினர். அப்போது, வறட்சி நிவாரணம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெட்லி உறுதியளித்துள்ளார்.

TN farmers in delhi


கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் தமிழகத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் தொடங்கியது. இந்தத் தொடர் போராட்டத்தில் சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

கடந்த ஏழு நாள்களாக வித்தியாசமாக நடைபெற்ற போராட்டம் டெல்லியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் மத்திய அரசு தலையிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது. பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசி அவர்கள் உறுதி அளித்த பின்னரே டெல்லியில் இருந்து வீடு திரும்புவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் தம்பிதுரை தலைமையில் விவசாயிகள் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்துப் பேசினர். விவசாயிகளுடன் அ.தி.மு.க எம்.பி.க்களும் உடன் இருந்தனர். சந்திப்பின்போது, காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். சந்திப்பின் முடிவில், வறட்சி நிவாரணம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அருண் ஜெட்லி உறுதியளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!