Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஏன் நம் மாண்புமிகு விவசாயி இப்படி ஆகிட்டாரு தெரியுமா?"

விவசாயி

நான்கு முழ வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, நெல் வயலில் களமிறங்கி வேலை செய்தவர்கள் இன்று நாட்டின் தலைநகரத்தில் கோவணத்துடன் அமர்ந்து, தங்களது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆடியில் பட்டம் தேடி விதைத்து தை மாதத்தில் யானை கட்டி போரடித்தவர்கள் நம் விவசாயிகள். ஆனால் இன்று இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்து, அவர்களுக்குத் தேவையான இரண்டு அல்லது மூன்று மூட்டை நெல்லுக்கே அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடமாவது எப்படியேனும் நல்ல மகசூல் கிடைக்கும் என  ஒவ்வொரு வருடமும் கடன்மேல் கடன் பெற்று விவசாயக் கடன் அதிகரித்ததுதான் மிச்சம். நிலத்தின் விளைச்சலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி நீர்வரத்தில் பிரச்னை, விளைச்சல் பொய்த்தது, வறட்சி, கடன் பிரச்னை என பல காரணங்களால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். சூழல் அனைத்தும் சாதகமாக இருந்தால் தனிப்பட்ட விவசாயி ஒருவரால் தனது குறுநிலத்தில் சராசரியாக இருபது பேருக்கான அரிசியை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அனைத்து ஆற்றலும் உறிஞ்சப்பட்ட நிலையில் இருக்கும் அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவே இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயந்திர உதவியுடன் நெல் அறுப்பு

1990-களின் மத்தியில் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பசுமைப் புரட்சியும் உலகமயமாக்கலும்  அதற்கான காரணமாகச் சொல்லலாம். தமிழக விவசாயத்தை அளவீடு செய்யவேண்டும் என்றால் அதனை பசுமைப் புரட்சிக்கு முன், பின் மற்றும், உலகமயமாக்கலுக்கு முன், பின் எனப் பிரிக்கலாம். பசுமைப் புரட்சிக்கு முன்பு விவசாயிகளிடம் ஒரு தற்சார்பு நிலை இருந்தது. விதை, உரம் அனைத்தும் அவர்களிடம் இருந்ததால் தொழிலும் அவர்கள் வசம் இருந்தது. ஆனால் பசுமைப் புரட்சியும் உலகமயமாக்கலின் பின்னணியில் உருவான தொழிற்சாலைகளும் தற்சார்பு நிலையை அவர்களிடமிருந்து பறித்தது.

தற்சார்பு நிலை என்பதை அவ்வளவு எளிதாக ஒரு அமைப்புச் சூழலில் இருந்து பறித்துவிட முடியாது. ஆனால் மற்ற எந்தத் துறையும் போல இல்லாமல் விவசாயம் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு இல்லை. விவசாயிகளுக்கு என்று நிரந்தரச் சம்பளம் ஒன்றை வரையறுத்துவிட முடியாது. அதனால் ஒருங்கிணைந்து குரல் எழுப்புவதும் சாத்தியமில்லாமல் போனது. உற்பத்தி செய்வதில் சிக்கல் ஒரு பக்கம் என்றால், உற்பத்தி செய்தவற்றை சந்தைப்படுத்துவதில் மற்றொருபுறம் சிக்கல். அதிக உற்பத்தி செய்தால் விளைச்சலுக்கான விலை வீழ்ந்து விடும் அல்லது விலை அதிகரிக்கும் நிலையில் உற்பத்தி குறைந்து விடும். இது விவசாயத்திற்கே உரிய சாபக்கேடு.

விவசாயி

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் என்றால் மற்றொருபக்கம் பெருநிலங்களுக்கான விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், விவசாயத்துக்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அருகிக் கொண்டே வந்ததால், அதுவும் குறைய நேரிட்டது. உலகமயமாக்கலுக்குத் தேவைப்பட்ட காடுகள் மற்றும் நீர்நிலைகள் அழிப்பு விவசாயத்துக்கான பக்கபலத்தை அழித்தது. இதனால் உண்டான வறட்சிக்குத் தீர்வுகாண முடியாமல்தான் தற்போது நாம் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது இயற்கையாக உண்டான வறட்சி இல்லை. செயற்கையாக காலம் தவறி உருவாக்கப்பட்டது. இந்த வறட்சியை சீர்படுத்த பருவமழையால் மட்டுமே முடியும். ஆனால் அதுவும் பருவம் தவறியே பெய்கிறது. இப்படி விதைப்பு தொடங்கி வானம் பொழிவதுவரை அத்தனையும் விவசாயத்துக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமைந்ததன் விளைவுதான் ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கி விட்டது.

இதற்கான தீர்வு, விவசாயிகளின் கோரிக்கையின்படி கடனைத் தள்ளுபடி செய்வதாலும் நதிகளின் ஓட்டத்தின்படி மாநிலவாரியாகப் பிரிப்பதினாலும் கிடைத்துவிடப் போவதில்லை. விதைப்பிலிருந்து விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது வரை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான மாற்றம் தேவை. அப்போதுதான் விவசாயிகள் வாழ்வு மேம்பட வழி ஏற்படும்.

- ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close