வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (21/03/2017)

கடைசி தொடர்பு:11:03 (22/03/2017)

காவிரியில் மணல் கொள்ளை..! களத்தில் இறங்கிய தோழர் நல்லகண்ணு

மணல் கொள்ளை

மிழகம் முழுவதும் வறட்சி அதிகமாகி, தற்போது குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ஆனால், மணல் கொள்ளையை அரசு தடுக்க நினைக்கவில்லை என்பதுதான் வேதனை. திருச்சி காவிரியில் நடக்கும் மணல் கொள்ளையை நினைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மிக வேதனைப்பட்ட சம்பவம் திருச்சியில் நடந்தது.

கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு

இன்று (21-03-17) காலை திருச்சி கல்லணை சாலையில் உள்ள மணல் குவாரியைப் பார்வையிட்ட நல்லகண்ணு, காவிரியில் மணல் அள்ளுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். சுமார் 2 மணிநேர காவிரியைப் பார்த்த அவர், “தமிழகம் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. கோடை வெயில் ஒருபக்கம், மண்டையைப் பிளக்கவைக்கிறது என்றால்... மறுபக்கம், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்குக் காரணம், 12 மாவட்ட மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரியில் கர்நாடக அரசு, சரியான நேரத்தில் போதுமான தண்ணீரை வழங்காததே ஆகும். தமிழகத்திலேயே அகண்ட காவிரியாகப் பாய்ந்து ஓடுவது திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான். காவிரி கொள்ளிடம் பகுதியில்தான், இரண்டு கரைகளையும் இணைக்கும் வகையில் மிகப்பெரிய மணல் பாலத்தை அமைத்து, அந்த ஆற்றுக்குள்ளேயே மணல் பாதையையும் அமைத்து... ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளையடிக்கிறார்கள். இதனால் கர்நாடகம் கொடுத்த குறைந்தபட்ச தண்ணீர், திருச்சியிலிருந்து கல்லணைக்குச் செல்லமுடியாத அளவுக்கு, இந்தப் பகுதியில் மணல் கொள்ளையை நடத்தி, காவிரியை இஷ்டத்துக்குச் சீரழித்துள்ளனர். ராட்சஷ பள்ளங்களைத் தோண்டியதன் விளைவு, காவிரி குளங்களைப்போல் மாறி இருக்கிறது. ஆகாயத் தாமரைகள் பூத்து... பாசனம் பிடித்துப்போய் இருக்கிறது. தண்ணீர் திண்டாட்டம் உள்ள கோடைக்காலத்திலும், இப்படி மணல் கொள்ளையின் மூலம் வருடத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி உள்ளனர்.

காவிரியில் தண்ணீரும் கிடைக்காததால், விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இப்போது குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் காவிரியைக் கபளீகரம் செய்து, பாலைவனமாக்கிட மணல் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் மணல் எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் மாணவர்களையும், பொதுமக்களையும் இணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். மணல்கொள்ளையைத் தடுக்கும் போராட்டத்தில் மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்