வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/03/2017)

கடைசி தொடர்பு:10:36 (22/03/2017)

சென்னை காவல்துறைக்கு மீண்டும் சாட்டையடி கொடுத்த நீதிபதி கிருபாகரன்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், போராட்டம் நடந்த மார்ச் 16-ம் தேதி, காவல்துறை உயரதிகாரிகள் எங்கு இருந்தார்கள் என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு, அங்கிருந்த பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நோயாளியின் உறவினர்கள், பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால், நோயாளிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி கிருபாகரன், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தை போலீஸ் ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, நோயாளிகள் சிரமப்பட்டது குறித்து மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் வீடியோக்கள் வெளியானது என்றும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை காவல்துறை உயரதிகாரிகள் எங்கு இருந்தார்கள் என்றும் வினா எழுப்பினார்.

மேலும், மார்ச் 16-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகள் எங்கு இருந்தார்கள் என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.