வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/03/2017)

கடைசி தொடர்பு:19:46 (21/03/2017)

"இது பெட்டி சர்ச்சை!'' - சட்டசபையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்வியும்... ஜெயக்குமார் பதிலும்!

ஜெயக்குமார்

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தமிழக பட்ஜெட் உரை ஆவணம் அடங்கிய பெட்டியை வைத்து பய பக்தியோடு வணங்கிய பின், சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், ஜெயலலிதா சமாதியில் அவர் வைத்த பெட்டி குறித்து சட்டசபையில் இப்போது புதிதாக சர்ச்சை எழுந்தது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, செவ்வாய்க்கிழமை பேரவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் உதயசூரியன், "பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என பல தலைவர்கள் முதல்வர்களாக இருந்தபோதெல்லாம் இந்த அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காலத்தில் நிதியமைச்சர்களாக இருந்தவர்கள் யாரும் பெட்டியில்  பட்ஜெட் உரையை வைத்து, சட்டசபைக்கு கொண்டு வந்ததில்லை. ஆனால் நீங்கள்தான் (டி.ஜெயக்குமார்) முதன்முதலில் பெட்டியில் வைத்து பட்ஜெட் உரையை கொண்டு வந்துள்ளீர்கள். 
அதேபோல் பட்ஜெட் உரையை, ஜெயலலிதா சமாதியில் வைத்து  எடுத்து வந்துள்ளீர்கள். சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன் பட்ஜெட் உரையை வெளியே எடுத்துச் செல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட்

அவரது பேச்சுக்கு இடையே குறுக்கிட்டுப் பேசிய நிதி அமைச்சர் டி. ஜெயக்குமார், "நான் ஒரு பெட்டியை வைத்து வணங்கினேன். அதில் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஏன் அதை பிரச்னையாக பார்க்கிறீர்கள்?" என்று சொன்னார், உடனே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து. "நிதி அமைச்சர் சொன்னதைப் பார்த்தால், பெட்டிக்குள் ஒண்ணும் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டு விட்டார்" என்று சொன்னதும் அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், நேரடியாகப் பதில் சொல்லாமல் மழுப்பியபடி பேசினார். "அரசின் வரும் நிதியாண்டிற்கான எதிர்காலத் திட்டங்கள் அடங்கிய பட்ஜெட் உரையை தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்றது தவறு" என்று தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  இதற்குப் பதில் அளித்த ஜெயக்குமார், ஸ்டாலினை பார்த்து, "நீங்கள் (தி.மு.க) ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் உரையை வீட்டுக்கு கொண்டு போனதில்லையா?" என்று கேட்டதுடன், "பட்ஜெட் உரையை உங்கள் ஆட்சியில் கசிய விட்டதால்தான் 1989-ம் ஆண்டு உங்கள் ஆட்சியை மத்திய அரசு கலைத்தது" என்றார். 

அப்போது எழுந்த ஸ்டாலின், "தவறான தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள். அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்; இல்லையென்றால், அவைக்குறிப்பில் இருந்து இதை நீக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக தி.மு.க உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்துநின்று கூச்சலிட்டனர். அப்போது, அவை முன்னவரும், அமைச்சருமான செங்கோட்டையன் எழுந்து, "அமைச்சர் ஜெயக்குமார் பேச்சையும், ஸ்டாலின் பேச்சையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்" என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தி.மு.க உறுப்பி்னர்கள் அமைதியானார்கள். மூடிய பெட்டிக்குள் இருந்த மர்மத்தை அமைச்சர் ஜெயக்குமார் எப்போது சொல்வார்?

-அ.சையது அபுதாஹிர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்