வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (22/03/2017)

கடைசி தொடர்பு:09:18 (22/03/2017)

“தீபா கேட்டதும்... பன்னீர்செல்வம் மறுத்ததும்!” - முன்னாள் நிர்வாகி சொல்லும் தகவல்

தீபா

தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளால் தீபா அணியின் ஆதரவுக்கூட்டம் கரைய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஒற்றை பதிலுக்காக பதைபதைப்போடு காத்திருக்கும் ஓ.பி.எஸ் அணிக்கு இப்போது சற்று ஆறுதலாக இருப்பது தீபா அணியிலிருந்து இங்குவந்துசேரும் ஆதரவாளர்கள்தான். 

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரது அண்ணன் மகளான தீபா, சசிகலாவுடனான கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு அதிரடியாக சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓ.பி.எஸ் சசிகலாவுடன் சுமூகமாக இருந்த இந்த நாட்களில் , சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த தொண்டர்கள் சாரி சாரியாக திரண்டுவந்து தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தீபாவுக்கு ஆதரவுக்கூட்டம் பெருகிவந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிமுகவில் பல நிகழ்வுகள் அரங்கேறின. முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்த சில நாட்களில் சசிகலாவுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் உருவாகி சில தினங்களில் தனி அணியாக உருவெடுத்தார் அவர். 

சசிகலா முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் அவர் சிறைப்பறவையாகிவிட, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சுமார் 1 டசன் எம்.பி எம்.எல்.ஏக்களுடன் இப்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது ஓ.பி.எஸ். அணி. 
ஆச்சர்யம் என்னவென்றால் ஓ.பி.எஸ் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தபின்னும் தீபா வீட்டு வாசலில் கூட்டம்மொய்த்தபடி இருந்ததுதான். ஆனால் கடந்த ஒருவார காலமாக தீபா மற்றும் அவரது கணவரின் அறிக்கை மற்றும் பேட்டிகளால் கலகலக்க ஆரம்பித்திருக்கிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை கூடாரம்.

தீபாபேரவை ஆரம்பித்தபோது சசிகலா அணிக்கு கிலி கொடுத்த முதல் இடம் காஞ்சிபுரம். அதிமுகவின் மேற்கு மாவட்ட கழக பிரதிநிதியான ஆர்.வி.ரஞ்சித்குமார் என்பவர்தான் காஞ்சிமாவட்டத்தில் தீபா ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து, பேரவை சார்பாக அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என காஞ்சியை தினம் தினம் அதகளம் செய்தவர். ஆனால் நேற்று அதிரடியாக ஓ.பி.எஸ் அணியில் ஐக்கியமாகி தீபாவுக்கே கிலி கொடுத்திருக்கிறார். 

தீபாவுக்கு அரசியலுக்கே உரிய பக்குவமோ, சாதுர்யமோ இல்லை என குற்றஞ்சாட்டி விலகியிருக்கும் அவரிடம் பேசினோம்.

ஓரே நாளில் தீபா அணியில் இருந்து ஓ.பி.எஸ் அணிக்கு தாவியது ஏன்?

அதிமுகவைப் பொறுத்தவரை அம்மாதான் எல்லாமே எங்களுக்கு. அவர் இறப்பு சாதாரணமாக இல்லாமல் மர்மமான முறையில் நிகழ்ந்ததால் என்னைப்போன்ற லட்சோப லட்சத் தொண்டர்கள் சசிகலா மீதான அதிருப்தியில் மனம் புழுங்கிக்கொண்டிருந்தோம். அப்போது தீபா துணிச்சலாக சசிகலாவை எதிர்த்து அரசியலுக்கு வந்தது ஆறுதலாக இருந்தது. அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை அவிழ்க்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் தொண்டர்களைத் திரட்டி அவரை சந்தித்தேன். தொடர்ந்து அவருக்கு மக்கள் ஆதரவு பெருகுவதற்கான பணிகளில் ஈடுபட்டேன்.

அவரை ஆதரித்த எங்களின் ஒரே நோக்கம், அம்மாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்ப்பது, சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்டெடுப்பது, எம்.ஜி.ஆர் அண்ணா, காமராஜர் போல் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவது இவைதான். ஆனால் என்ன காரணத்தினாலோ ஆரம்பத்திலிருந்தே இவற்றில் அவர் அக்கறை காட்டவில்லை. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தபோது, ரத்த உறவுகள்தான் விசாரணை கேட்கமுடியும் என நீதிபதி அதை தள்ளுபடி செய்தார். ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் சசிகலாவுக்கு எதிர்ப்பு நிலை எடுத்த தீபா மட்டுமே வழக்கு தொடுக்கமுடியும் என்ற நிலையிலும் அதில் அவர் அக்கறை காட்டாதது இன்றுவரை அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. 
மேலும், அதிமுகவில் இத்தனை பிளவுக்கும் காரணம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் தலையீடு மட்டுமே. அவர்கள் வெளியேறினால் அதிமுக திரும்ப ஒன்றுபடும். அதனால் சசிகலாவை விரட்டிவிட்டு கட்சியையும் இரட்டை இலைச் சின்னத்தையும்  கைப்பற்றும் முயற்சிகளில் இறங்காமல் திடுதிப்பென பேரவை அறிவிப்பை வெளியிட்டார். புதியதாக ஒரு அமைப்பை துவங்கினால் அதிமுகவில் நமக்குள்ள உரிமையை நாமே விட்டுக்கொடுப்பதுபோல் ஆகிவிடுமே என அதற்கு நாங்கள் தெரிவித்த எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவில்லை

ஆர்.வி ரஞசித்குமார்பேரவையை துவக்கிய பின் அது கட்சியாக மாறும் என்றார்களே, அதுவரை பொறுக்கமுடியாதா..?

பேரவை துவக்கியபோதே பல சர்ச்சைகள். கட்சியை நடத்தும் நிர்வாகத்திறமை அவரிடம் இல்லாதது, யார் யார் பேச்சையோ கேட்டு அறிக்கையும் பேட்டியும் கொடுத்தது என  ஆரம்பத்திலேயே எதுவும் சரியில்லாமல் நடந்தது. இதில் அவரை நம்பி வந்த என்னைப்போன்ற ஆயிரக்கணக்காணோர் மனம் புழுங்கினர். இந்நிலையில் ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அப்போதும் எல்லாம் சரியாகிவிடும் என பேரவைப் பணிகளில் சுணக்கம் காட்டாமல் தொடர்ந்து செயல்பட்டேன். இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பு தீபாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அம்மாவின் மர்ம மரணம், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்குவது உள்ளிட்ட பிரச்னைகளை கையிலெடுத்தது ஓ.பி.எஸ் அணி. அவரின் அழைப்பை ஏற்று இணைந்து செயல்படுவது எதிர்காலத்திற்கு நல்லது என நிர்வாகிகள் பலர் கருத்து சொன்னார்கள். அதற்கு ஒப்புக்கொண்டாலும் ஓ.பி.எஸ் உடனான சந்திப்பில் அவரது அரசியல் பக்குவமின்மையையே வெளிப்படுத்தினார். 

கட்சியில் உறுப்பினராகி 5 ஆண்டுகள் ஆகவில்லையென்ற சட்ட விதிகளின்படிதான் சசிகலாவை ஓ.பி.எஸ் எதிர்க்கிறார். இந்த அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் அதிமுகவில் இன்னமும் அடிப்படை உறுப்பினராகக் கூட ஆகாத இவர் எடுத்த எடுப்பில் கட்சியின் உயர்பதவியான பொதுச்செயலாளர் பதவியை கேட்டு ஓ.பி.எஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். சட்ட சிக்கலை எடுத்துச்சொல்லி முதலில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி தருவதாகவும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நிற்கவைப்பதாவும் அவர்கள் வாக்குறுதி தந்தனர். 

'தமிழகம் முழுவதையும் பயணம் செய்யுங்கள். இன்னும் ஆதரவு பெருகும். பின்னர் கட்சி முழுமையான நமது கட்டுப்பாட்டில் வந்தபின் உரிய முக்கியத்துவம் அளிப்போம்' என்றனர். ஆனால் தனக்கு பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதாக கற்பிதம் செய்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார். 

இப்போதுள்ள அரசியல் சூழலில் இது பெரிய வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக்கொண்டால் பேரவையை வளர்க்கலாம் என ஆலோசனை சொன்னதை அவர் ஏற்கவில்லை. அரசியலில் பெரிய அனுபவமும் இல்லை. அனுபவசாலிகள் சொல்வதை கேட்பதும் இல்லை. இதுதான் அவரது பலவீனம். 

அதிமுகவில் கொ.ப.செ ஆக தன் அரசியல் பயணத்தை துவக்கி அத்தனை போராட்டங்கள், எதிர்ப்புகளை சந்தித்து அரசியலில் அதிகாரங்களை அடைந்தவர் ஜெயலலிதா. அவரின் வாரிசு என்பவர் இந்த வரலாற்றை அறியாமல் கட்சியின் உயர் பதவிக்கு உழைக்காமல் வர நினைப்பது நியாயமா என்று அப்போதே என்னைப்போன்றவர்களுக்கு அதிருப்தி உண்டானது. பக்குவமற்ற அவரது நடவடிக்கைகள் தொடர்ந்ததால் இனி அவருடன் சேர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை என உணர்ந்தேன். என் ஆதரவாளர்களும் அந்த முடிவுக்கு வந்திருந்தனர்.

ஆர்.வி ரஞ்சித்குமார்

தலைமை என்ற முறையில் அவரது முடிவுகளை ஏற்கவேண்டும் அல்லவா..?

அம்மாவின் வாரிசாக எண்ணியே அவரது தலைமையை ஏற்றிருந்தோம். ஆனால் பேரவையின் எந்த முடிவுகளையும் அவர் எடுக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. அதுதான் பிரச்னையே. முதலில் அவரின் கணவர் மாதவன் முடிவுகளை எடுத்தார். பிறகு டிரைவர். இப்போது யார் எனத் தெரியவில்லை. இப்படி யாரையோ நம்பி கட்சி நடத்தினால் எதிர்காலத்தில் பேரவை விளங்காது என்பது என் 20 வருட அரசியல் வாழ்வில் நான் கண்ட உண்மை.

மேலும் பேரவையின் அலுவலகத்தில் கட்சி அடையாளமில்லாத நபர்கள் வளையவருகிறார்கள். காதில் கடுக்கன், கடுகடு வார்த்தை என அவர்களின் நடவடிக்கை எதுவும் கட்சிக்கு பொருத்தமில்லாதவை. கணவருக்கும் அவருக்குமே எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து இல்லை. யாரை எதிர்ப்பதாக அவர்கள் சொல்கிறார்களோ அவர்களுடனேயே அவர்களில் யாரோ ஒருவர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இப்போதும் கூட கட்சி துவங்கப்போவதாக சொல்லிய அவரது கணவர், தீபாவின் பின்னணியில் தீய சக்தி இருப்பதாக சொல்கிறார். 

இதுதவிர அவருக்கு அரசியல் தலைவருக்குரிய ஒரு பக்குவம் துளியும் இல்லை. பல்வேறு ஊரிலிருந்து அவரைக்காண வரும் தொண்டர்கள் காலையிலிருந்து வாசலில் காத்திருப்பார்கள். வீட்டிலேயே இருந்தாலும் பிற்பகலில்தான் சந்திப்பார். மாலை அணிவிப்பதையோ சால்வை அணிவிப்பதையோ ஒரு உற்சாகமாக பெறமாட்டார். ஏதோ முதல்வராகவே ஆகிவிட்டவர்போல் நடந்துகொள்வார். சால்வையை பணிவோடு வாங்காமல் ஒருகட்டத்தில் பாதுகாவலரை வைத்து வாங்க ஆரம்பித்தார். அது தொண்டர்களை அவமதிப்பதாக இருந்தது. இந்த விஷயங்கள் எல்லாம் என்னை யோசிக்கவைத்தது.

ஓ.பன்னீர்செல்வம்

எங்கள் வருத்தமெல்லாம் சின்ன வயதில் இத்தனை பெரிய பொறுப்பு கிடைக்கப்பெற்ற ஒருவர், தனக்குள்ள பிரபல்யத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்பதுதான். குறைந்தது அம்மாவின் மர்ம மரணத்தில் உள்ள முடிச்சைக்கூட அவிழ்க்க அவர் முயற்சி எடுக்காதது என்னைப்போன்றவர்களுக்கு வேதனை தந்ததால் இனி இங்கு பயணிப்பது வீண் என உணர்ந்து ஓ.பி.எஸ்ஸை சந்தித்து என் ஆதரவாளர்களுடன் இணைந்தேன். 

ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெல்வாரா?

நிச்சயம் வெல்வார். அம்மாவிற்குப்பிறகு அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கப்போகும் தேர்தல் இது. தொண்டர்களின் மனநிலையை பிரதிபலிக்கப்போகும் இந்த தேர்தலில் மதுசூதனன் நிச்சயம் வெற்றிபெறுவார். தேர்தல் முடிவுக்குப்பின் தீபாவும் தன் நிலையை உணர்ந்து ஓ.பி.எஸ் பக்கம் வருவார். அதுதான் அவரது எதிர்காலத்திற்கும் நல்லது என முடித்தார் ரஞ்சித்குமார்.

- எஸ்.கிருபாகரன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்