'என்னை கொன்னுடுங்கண்ணே...!' என்று சொன்னவர் இப்போது எப்படி இருக்கிறார்...? #FollowUp

தர்மபுரி நெசவாளர் காலணியில் ஆதரவற்ற கிடந்த ஊனமுற்ற இளைஞன்

“என்னைக் கொன்னுடுங்கண்ணே...” - கதறிய இளைஞர்! கல்லாகி நின்ற அதிகாரிகள் என்ற தலைப்பில், நேற்று (21-03-17) 'விகடன்' இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். கடந்த 19-ம் தேதி இரவு தர்மபுரி நெசவாளர் காலணி பஸ் ஸ்டாப்பில், ஆதரவற்ற நிலையில் கிடந்த ஊனமுற்ற ஒருவரைப் பாதுகாப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகளையும், அதற்கு ரெஸ்பான்ஸ் கொடுக்காத அதிகாரிகளைப் பற்றியுமான அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டுப் பலரும் ஆதங்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த ஆனந்தச் செய்தி!

அதற்குமுன் சிறு தன்னிலை விளக்கம்; அன்று இரவு அவரை பாதுகாப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகளைத் தெளிவாக எழுதியிருந்தோம். நம்முடைய முதல் நோக்கம், அசைவற்ற நிலையில்  சாலையில் கிடந்தவர் ஏதேனும் வாகனத்தில் அடிபட்டு ஆபத்தாகிவிடக்கூடாது என்பதுதான். அதற்கடுத்துதான் சிகிச்சை கொடுப்பது, காப்பகத்தில் சேர்ப்பது எல்லாமே! அதிகாரிகள் நம் குரலுக்கு செவிசாய்க்கவில்லை என்பதால்தான், நம்முடைய முதல் நோக்கத்தை நிறைவேற்ற அவரை அந்தச் சாலைப் பகுதியில் இருந்து... வேறுபகுதியில் பத்திரமாகப் படுக்கவைத்துவிட்டு, காலையில் வந்து அடுத்தகட்ட முயற்சிகளை எடுக்கலாம் என்றிருந்தோம். காலையில் பார்த்தால், நாம் விட்டுச்சென்ற இடத்தில் அவரைக் காணவில்லை.. தேடியும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகுதான் நடந்த நிகழ்வுகளை உருக்கமாகப் பதிவுசெய்திருந்தோம். செய்தி வெளியிட்ட சிலமணி நேரங்களிலேயே தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அலெர்ட் ஆனது... அதிசயம் நிகழ்ந்தது.

செய்தியைப் பார்த்துவிட்டுத் தலைமைச்செயலகத்திலிருந்து போன் செய்து ‘டோஸ்’ விட்டிருக்கிறார்கள். அதற்குப்பிறகு, தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், மாவட்டச் சமூகநலத் துறை அதிகாரிகளைக் கூப்பிட்டு, ''அந்த ஆதரவற்ற நபர் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து உடனடியாக மீட்க வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து, மிகத் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறது சமூகநலத் துறை. தர்மபுரி சிட்டிக்குள் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தேடுதலுக்குப் பிறகு, கமலம் மருத்துவமனைக்கு எதிரில் அமர்ந்திருந்த அந்த ஆதரவற்ற நபரைக் கண்டுபிடித்து மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு... தர்மபுரி பி.ஆர்.ஓ மூலமாக நம்மை அழைத்தார்கள். நம்மிடம் பேசிய பி.ஆர்.ஓ சண்முகசுந்தரம், “கலெக்டர் இதுதொடர்பாக உங்களிடம் பேசச்சொன்னார். அந்த  ஆதரவற்ற நபருக்கு என்ன தீர்வோ அதை உடனடியாகச் செய்துவிடலாம் என்று சொல்லிவிட்டார்'' என்றார். மாவட்டச் சமூகநலத் துறை அதிகாரி ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழன் ஆகிய இருவரும் இதுதொடர்பாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். கலெக்டரிடமிருந்து அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. 

இருவரிடமும் பேசினோம், “எங்களுக்குத் தகவல் வந்த அடுத்த நிமிடமே அவரைத் தேட ஆரம்பித்துவிட்டோம். மூன்று மணி நேரத்துக்குள் அவரைக் கண்டுபிடித்து, முதலில் அவருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து அங்கிருந்து மீட்டுவந்து ஜி.ஹெச்சில் அட்மிட் செய்தோம். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால், சைக்கார்ட்டிஸ்ட் ஒப்பீனியன் வாங்கிய பிறகுதான் அவரை ஹோமில் சேர்க்கலாமா... இல்லை, மனநல மருத்துவமனையில் சேர்க்கலாமா என்று முடிவு செய்வோம். இப்போது, அவருக்கான முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றனர். இதனையடுத்து, எந்த வார்டில் அவரைச் சேர்த்திருக்கிறார்கள் என்று விசாரித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தோம். நாம், அங்குச் செல்வதற்கு முன்பாகவே மகிழன் அங்கு வந்துவிட்டார். எம்.எம் வார்டில் அவருக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. ஆனால், அவர் எப்படிச் சுற்றிக்கொண்டிருந்தாரோ... அப்படியே பெட்டில் கிடத்தப்பட்டிருந்தார். வார்டு முழுக்க ஒரே நாற்றம். பக்கத்து பெட்காரர்கள் எல்லாம் முகம் சுழித்தபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ''என்ன சார், ஒண்ணுமே பண்ணாம அப்டியே போட்டு வெச்சிருக்காங்க'' என்று மகிழனிடம் கேட்டோம். ''ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. அது, ஏறி முடிந்ததும்தான் எல்லாம் செய்ய வேண்டும்'' என்றார். ''நாங்க, இங்கேயே வெயிட் பண்றோம்... சார்'' என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவர் காலில் சுற்றப்பட்டிருந்த அழுக்குத் துணி அகற்றப்பட்டது; ஷேவ் செய்யப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டது. பிறகு, அவரைக் குளிப்பாட்டி, புதுத்துணி உடுத்தி பெட்டுக்கு அழைத்துவந்தனர். அதற்குள் மருத்துவமனை டீன்  சாமிநாதன், சமூகநலத் துறை அதிகாரி ரேவதி ஆகியோர் அங்கு வந்துவிட்டனர். அழுக்காக இருந்தவர் தற்போது அழகாகி வருவதைப் பார்த்த அந்த வார்டில் இருந்தவர்கள் (முன்னர், முகம்சுழித்தவர்கள்) எல்லாம் வாய்பிளந்தபடி பார்த்தார்கள். அவர்களை அறியாமல் அவர்கள் அத்தனைபேரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது. அவருக்குச் சாப்பிட உணவு தயாராக இருந்தது. குடிக்க, மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது. இரண்டு நர்ஸ்கள், அவர் பக்கத்திலேயே இருந்து... அவரைச் சாப்பிடவைத்தார்கள். ''மூணு நாளு அப்சர்வேஷன்லயே வெச்சிருக்கலாம்னு சொல்லியிருக்காங்க சார்... அதற்குப்பிறகு அவருக்கு என்ன தேவையோ அதை நாங்க நிச்சயம் செய்வோம்''னு உறுதியளித்தார் மகிழன்.

நன்றி சொல்வதற்காக தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனுக்கு போன் செய்து பேசினோம், “1077 நல்ல திட்டம். நம்ம மாவட்டத்துலதான் அதைச் சிறப்பாச் செயல்படுத்திக்கிட்டு இருக்கோம். நீங்க சொல்லியிருந்த குறைகளை நிவர்த்திச் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளேன். எஸ்.பி-யிடம் பேசியிருக்கேன். 1077-ஐக் கண்காணிக்க ஓர் அதிகாரியை போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்து  நியமிக்கச் சொல்லியிருக்கேன். இனிமே, இதுபோன்ற தப்பு நிச்சயம் நடக்காது. எதுவா இருந்தாலும் என்னிடம் நேரடியாச் சொல்லுங்க. நான் உடனே ஆக்‌ஷன் எடுக்குறேன். அந்த ஆதரவற்ற நபருக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சபிறகு, அவரை ஹோமிலோ அல்லது முடிஞ்சா அவரது வீட்டிலோ சேர்த்துவிடுறோம். அதுதொடர்பான அப்டேட்டை மகிழன் மூலமா உங்களுக்குத் தெரியப்படுத்துறேன்'' என்றார். 

கடைசியாக அந்த ஆதரவற்ற நபரிடம் பேசினோம், ''ரொம்ப, நல்லா இருக்குண்ணே. இங்க, நர்ஸ் அக்காள்லாம் இருக்காங்கண்ணே'' என்றபடி ஏதேதோ மனம்போன போக்கில் பேசிக்கொண்டிருந்தார். அமைதியாகக் கேட்டுவிட்டு. ''அண்ணே, உங்க பேரு என்னா'' என்றோம். ''கே.ஆனந்துண்ணே'' என்று அவர் சொன்னபோது, அந்த வார்டே ஆனந்தத்தில் திளைத்தது.

- எம்.புண்ணியமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!