இயற்கை உரம், நீர் மேலாண்மை, மூலிகைப் பண்ணை! -பள்ளிகளைக் கலக்கும் 'கலாம் நேரம்' | Will schools follow Abdul Kalam vision India movement's steps to save agriculture

வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (22/03/2017)

கடைசி தொடர்பு:18:05 (23/03/2017)

இயற்கை உரம், நீர் மேலாண்மை, மூலிகைப் பண்ணை! -பள்ளிகளைக் கலக்கும் 'கலாம் நேரம்'

வகுப்பறைகளில் கலாம் நேரம்

மிழகப் பள்ளிகளில் 'கலாம் நேரம்' என்ற பெயரில் மாணவர்களிடம் விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கம் ஈடுபட்டுள்ளது. 'இளைய சமுதாயத்துக்கு அப்துல் கலாம் வழங்கிய உறுதிமொழிகளைக் கடைபிடிக்கவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் 'கலாம் நேரம்' என்ற தலைப்பில் பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்கிறார் வெ.பொன்ராஜ். 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீ நாராயணசுவாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் கலாம் நேரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுப்புற மேம்பாடு, குப்பை மறுசுழற்சிக்கு பத்து நிமிடமும் விவசாயத்துக்கு முப்பது நிமிடம் என ஒவ்வொரு வகுப்பறைக்கும் 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம். "சத்தியமங்கலம் பள்ளியில் இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தக் காரணம், பள்ளியின் மேலாளரான சுப்பிரமணியன் மற்றும் செல்வமணி ஆகியோரது ஆர்வம்தான். பணி நேரத்துக்குப் பின்னரும் இந்தத் திட்டத்தை முழு வீச்சில் கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளனர். கிராமத்தில் பயிலும் மாணவர்களை தனித்தன்மையுடன் உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் இதன்மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்" என விவரித்தார் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோகராகப் பணிபுரிந்த வெ.பொன்ராஜ். தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

"மாணவ சமுதாயத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கொடுத்த உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் இப்படியொரு திட்டம் தேவை என்பதை உணர்ந்தோம். அதை மாணவர்கள் மத்தியில் விதைப்பது மட்டுமல்லாமல், அனுபவத்தின் மூலம் சுற்றுப்புறச்சூழலைக் காப்பதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தால், விவசாயத்தின் தன்மையையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். விவசாயம், மரம் வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம், இயற்கை உர உற்பத்தி, மருத்துவ மூலிகை வளர்ப்பு முதலானவற்றை இந்த பாடத் திட்டத்தின் வழியாக கற்றுத் தருகிறோம். 'சிறு மூலிகை தாவரங்கள் மூலம் நோய்கள் வராமல் மாணவர்கள் தங்களையும் குடும்பத்தையும் எப்படிப் பேணிக் காத்துக் கொள்ள முடியும்' என்பதை அனுபவபூர்வமாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். இப்படியொரு அறிவார்ந்த செயல்முறைப் பயிற்சியை, அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் மாணவர் தலைவர் நரேஷ் குமார் உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் பரமாத்மா இதை வடிவமைத்துக் கொடுத்தார். பள்ளிகளில் குப்பை மறுசுழற்சிக்காக ஆறு கூடைகள் வைக்கப்படுகின்றன. வெள்ளைக் காகிதம், செய்தித்தாள், பிளாஸ்டிக், பழுப்பு நிறக் காகிதம், கார்போர்ட், மற்றவை என கூடைகள் பிரித்து வைக்கப்படும். மக்காத குப்பைகளைப் பிரித்து எடுப்பதற்காக இவ்வாறு வைக்கப்பட்டுள்ளன. இடைவேளையின்போது மாணவர்கள் குப்பைகளைக் கொண்டு வந்து போடுவார்கள். இந்தக் குப்பைகளை எடைபோட்டு புத்தகத்தில் குறித்து வைத்துவிடுவார்கள். பள்ளியில் உள்ள சமையலறையில் உள்ள காய்கறி கழிவுகளை பசுமாட்டுக்கு உணவாகவும் செடிகளுக்கு உரமாகவும் மாற்றும் பணியில் ஈடுபடுவார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடும். 

கலாம் நேரம்

அடுத்தபடியாக, விவசாயம் சார்ந்த பணிகளுக்கு முப்பது நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு, மரக் கன்றுகளை நடவு செய்தல், காடு வளர்த்து பராமரித்தல், மூலிகை விவசாயம் எனப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, பள்ளி வளாகத்தில் நீர் மேலாண்மை நன்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக் கூரையில் இருந்து வடியும் மழைநீர் குளத்துக்கு அனுப்பப்படுகிறது. பள்ளி மைதானத்தில் சேகரிக்கப்படும் மழைநீரும் குளத்துக்கு அனுப்பப்படுகிறது. குளத்துக்கு அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, எல்லா காலங்களிலும் ஆழ்துளை கிணற்றில் நீர் கிடைக்க குளம் காரணமாக உள்ளது. வறண்ட காலங்களில் நீர் மேலாண்மை மிக முக்கியமானது. சமையலறை மற்றும் கழிவறை ஆகியவற்றில் இருந்து வரும் கழிவு நீரினை குழாய் வழியாக ஒன்றாகச் சேர்த்து நீர் சுத்திகரிப்பு பகுதிக்கு அனுப்பப்படுகின்றன. அங்குள்ள கல்வாழையானது அந்த நீரில் உள்ள கரிமக் கூட்டுபொருளினை எடுத்துக்கொண்டு மண்ணுக்கு ஆக்சிஜனை அளிக்கிறது. கல்வாழை செடிக்கு அடியில் செங்கல்லினால் ஆன அடுக்கு வடிகட்டி கட்டப்பட்டுள்ளது. பள்ளியில் இருக்கும் மரங்களுக்கு இந்த நீரினை சொட்டு நீர்ப்பாசனம் வாயிலாக அனுப்பப்படுகிறது. மாணவர்கள் விவசாயம் செய்வதற்காகவே இருபது சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் இரண்டு மாணவர்கள் விவசாயத்துக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு அங்கு வளர்க்கப்படும் செடிகள் பற்றியும் தண்ணீர், உரம் இடுவது பற்றியும் பள்ளியின் மேலாளர் வகுப்பு எடுப்பார். இதன் மூலம் செயற்கை உரங்களின் தீமைகளை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு வகுப்பினரும் தனித்தனியாக இயற்கை உரக்குழியை உருவாக்கி, பள்ளியில் உள்ள மரங்களில் இருந்து கீழே விழுந்த இலைகளையும் உணவுக் கழிவுகளையும் சேகரிப்பார்கள். இதன் எடை அளவு குறிக்கப்படும். இதன்வழியாக இயற்கை உரத்தை உற்பத்தி செய்து மரங்களுக்கு உரமாகப் போடுவார்கள். 

பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, பள்ளி வளாகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. மேலும், 150 மரங்களை எங்களுடைய அமைப்பின் மூலம் நிறுவியிருக்கிறோம். சொர்க்க மரம், வேப்பமரம், மூங்கில், மலை பூவரசு, புளியமரம், மகாகனி, சில்வர்ஓக் உள்பட பலவகை மரங்களை நட்டுள்ளோம். இதில், ஒரு மரத்துக்கு இரண்டு மாணவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். அந்த செடியின் வளர்ச்சியின் இந்த மாணவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். காடு வளர்த்தல் திட்டத்தின்கீழ் மூன்றில் இரண்டு பங்கு தேக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. துளசி, கல்வாழை, வல்லாரைக்கீரை, கற்றாலை, மூங்கில், தூதுவளை பொன்னாங்கன்னி போன்ற மூலிகைச் செடிகளும் வளர்க்கப்படுகிறது" என விவரித்தவர், இறுதியாக, "மாணவர்களுக்கான அப்துல் கலாமின் பத்து உறுதிமொழிகளை ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒட்டியிருக்கிறோம். அந்த உறுதிமொழிக்குக் கீழே கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கண்ணாடியைப் பார்த்து உறுதிமொழியைச் சொல்லிவிட்டு வகுப்பறைக்குள் செல்ல வேண்டும். உறுதிமொழியும் எளிதில் மனதில் பதிந்துவிடும். இயற்கை உரங்களான பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யம், வெர்மிகம்போஸ்ட், வெர்மிவாஷ் போன்றவைகளை உபயோகப்படுத்துவதால் பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழக மாணவர்கள் விவசாயத்தில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அந்தக் கனவின் ஒருபகுதியாகவே கலாம் நேரத்தை வடிவமைத்திருக்கிறோம்" என்றார் உற்சாகத்துடன். 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close