'தீபா அணிக்கு திருமாவளவன் கொடுத்த அதிர்ச்சி!' - ஏமாற்றத்துடன் திரும்பிய முன்னாள் அமைச்சர் #VikatanExclusive | Sorry, We cannot support Deepa, says Thirumavalavan to Deepa supporters

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (22/03/2017)

கடைசி தொடர்பு:11:33 (23/03/2017)

'தீபா அணிக்கு திருமாவளவன் கொடுத்த அதிர்ச்சி!' - ஏமாற்றத்துடன் திரும்பிய முன்னாள் அமைச்சர் #VikatanExclusive

 திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் ஆதரவு கேட்டுச் சென்ற தீபாவின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கடும் அதிர்ச்சியடைந்தாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கியுள்ளார். அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மார்ச் 23-ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தீபாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினரில் சிலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளனர். இதனால் தீபாவின் ஆதரவு எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழ்நிலையில் மக்கள் நலக்கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதுதெரிந்த பிறகும் தீபா அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், இன்று (மார்ச் 22) தொல்.திருமாவளவனைச் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவை ஆதரிக்க வேண்டும் என்று பாண்டுரங்கன், திருமாவளவனிடம் கேட்டுள்ளார். 25 நிமிடங்கள் நடந்த சந்திப்பில், பாண்டுரங்கனிடம் ஆதரவு அளிக்க முடியாது என்று நேரிடையாகவே திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் தீபா அணியினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  

 இதுகுறித்து தீபா அணியினர் கூறுகையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆர்.கே.நகர்த் தொகுதியில் குறிப்பிட்ட சதவிகிதம் ஓட்டுவங்கி உள்ளது. அந்தக்கட்சி சார்பில் கடந்த தேர்தலில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி போட்டியிட்டார். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதனால் திருமாவளவனிடம் ஆதரவு கேட்கலாம் என்று தீபாவும், பேரவை நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்தோம். அதன்படி முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தலைமையில் பேரவை நிர்வாகிகள் திருமாவளவனைச் சந்தித்தோம். 
எங்களை இன்முகத்துடன் வரவேற்றுப் பேசிய திருமாவளவனிடம் தேர்தலில் ஆதரவு தொடர்பாக பாண்டுரங்கன் பேசினார். அப்போது, அவர் ஆதரவு அளிக்க முடியாது என்று பதில்அளித்தார். இந்தப் பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதைத்தவிர தீபாவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பேசினார்" என்றனர். 
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசியவர்கள், "தீபா அணியிலிருந்து இன்று காலை எங்களுக்கு போன் அழைப்பு வந்தது. திருமாவளவனைச் சந்திக்க அனுமதி கேட்டனர். உடனே நாங்களும் திருமாவளவனிடம் கேட்டுவிட்டு அனுமதி கொடுத்தோம். அரசியல் ரீதியாகப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தீபா அணியினர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டது திருமாவளவனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அலுவலகம் தேடி வருபவர்களை அன்பாக வரவேற்பதுதான் தமிழர்களின் மரபு. அதன்படி தீபா அணியினருக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்றோம். இன்றைய அரசியல் சூழ்நிலையைக் குறித்துப் பேசினோம். அப்போது பாண்டுரங்கன், அவரது காலகட்ட அரசியலைக்குறித்துப் பேசினார். அதைத் திருமாவளவன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார். தீபாவுக்கு ஆதரவு இல்லை என்றதும் தீபா அணியினரின் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. இதன்பிறகு சில நிமிடங்கள் பேசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்"என்றனர். 

 திருமாவளவனை, தீபா அணியினர் சந்தித்த தகவல் மீடியாக்களுக்குத் தெரிந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்தனர். அப்போது திருமாவளவன் அளித்த பேட்டியில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்துள்ளது. இதனால் எங்களிடம் ஆதரவு கேட்டு வந்த தீபா அணியினரிடம் அந்தப்பதிலைத் தெரிவித்துள்ளோம். அவர்களும் எங்களது கருத்தைத் தெரிந்துகொண்டு சென்றுவிட்டனர்"என்றார். 

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்த நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தீபா அணியினர் திருமாவளவனைச் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

- எஸ்.மகேஷ் 

 


டிரெண்டிங் @ விகடன்