வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (22/03/2017)

கடைசி தொடர்பு:23:13 (22/03/2017)

'இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்...!'- டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்

டிடிவி.தினகரன்

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் கடுமையாக போராடி வருகின்றன. இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் விவாதம் நடந்தது.

இந்நிலையில் இன்று மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா சமாதிக்கு அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு மத்தியில், 'என்றென்றைக்கும் இரட்டை இலைச் சின்னம் அ.தி.மு.க-வில் தான் இருக்கும். நாளை தேர்தல் ஆணையம் எங்களுக்குச் சாதகமான முடிவை அறிவிக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாளை நான் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்வேன். எங்களுக்கு வெற்றி 100 சதவிகிதம் உறுதி. தேர்தலில் போட்டியிட எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்த பின் பிரசாரத்தை தொடங்குவோம்.' என்று கூறியுள்ளார்.