‘தி.மு.க., அ.தி.மு.கவுக்கு மாற்று நாங்கள்தான்’: மார்தட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

                           ஆர்.கே நகர்

‘ஊழல் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுக்கு மாற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்கிறார் அக்கட்சியின் ஆர்.கே.நகர் வேட்பாளர் ஆர்.லோகநாதன்.

வரும் ஏப்ரல் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. வேட்மனுத் தாக்கலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆர்.கே.நகரில் களம் இறங்கியுள்ள லோகநாதனை பேட்டிக்காக, அவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்தோம். மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கிய அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்குச் சளைக்காமல் பதிலளித்தார் லோகநாதன்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன்அவர் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வி.ஐ.பி. தொகுதி என்று பெயர்தான் இருக்கிறது. ஆனால் சாலைகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளைக் கூட வார முடியாமல் திணறுகிறார்கள். ஜெயலலிதாவின் உத்தரவால் 250 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அவர் மறைந்த நாளுக்கு அடுத்த நாளே 250 பேரையும் சென்னை மாநகராட்சி வேலையைவிட்டு அனுப்பிவிட்டது. அதுதான் இந்த விஐபி தொகுதியின் இன்றய நிலை.

திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள். எங்கள் மீது எந்த ஊழல் குற்றச் சாட்டுகளும் இல்லை. ஊழல் கட்சிகளுக்கு எதிராக மாற்று அரசியலை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலைச் சந்திக்கிறது. நாங்கள் எளிமையானவர்கள். அடித்தட்டு மக்களுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்பதை நாங்கள் மக்களிடம் சொல்கிறோம். ஏன் எனில் ஆர்.கே.நகரின் பிரச்னைகளில் நாங்கள்தான் பலமுறை தலையிட்டு போராடியிருக்கிறோம். எனவே மாற்று அரசியலை வாக்காளர்களிடம் கொண்டுபோவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. 

மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவும் இப்போது எங்களுக்கு இந்தத் தேர்தலில் இல்லை. அவர்கள் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஓட்டு யாருக்கும் போடமாட்டோம் என்று கூறவில்லை. அந்த இரண்டு கட்சிகளின் தோழர்களின் ஓட்டுகளும் எனக்குதான் வரும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு அந்தக் கட்சிகளின் தலைமையும் அனுமதிப்பார்கள். அவர்களுக்கு அரசியல் நிர்பந்தம் இருந்திருக்கலாம். அதனால் வெளிப்படையாக எங்களுக்கு ஆதரவை அவர்களால் அளிக்க முடியாமல் போயிருக்கலாம்.

ஆர்.கே.நகரில் தீர்க்கமுடியாத பிரச்னைகள் ஏராளமானவை இருக்கின்றன. அவை, ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆன பிறகும் தீர்க்கமுடியவில்லை என்பதுதான் உண்மை நிலை. மாநில அளவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத்தான் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் அமல்படுத்தினார். இந்தத் தொகுதிக்கென விசேஷமான திட்டங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை. அதில் ஒரு அணுவையும் அவர் அசைக்கவில்லை. ஏன் திமுக எம்.எல்.ஏ. இங்கு இருந்தபோதும் ஒன்றும் செய்துவிடவில்லை.

நோய்களை உருவாக்கிவரும் கொடுங்கையூர் குப்பைமேட்டை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு ஆ.கே.நகர் எம்.எல்.ஏ. என்ற முறையில் யாரும் எதுவும் செய்யவில்லை. மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பற்றியும் அரசுக்கு அக்கறையில்லை. வீடுகள் கட்டிக்கொடுக்கிறோம் அறிவிப்பைக் கொடுத்துவிட்டு வாழ்வாதாரம் பற்றிய திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது தமிழக அரசு. ஆர்.கே.நகர் முழுக்க இருப்பது போக்குவரத்து நெரிசல். அதைத் தீர்க்கவும் அரசு சார்பில் முயற்சிகள் இல்லை. பொது மக்களுக்கென விளையாட்டுத் திடல் இல்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கு ஏற்ப இல்லை. இருக்கும் ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை. அதிலும் மாலை நேரங்களில் அந்த நிலையங்கள் மூடப்பட்டுவிடுகின்றன. இதனால் ஆர்.கே.நகர் மக்கள் அளவுக்கு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுமருத்துவமனையாகவும் மாற்றப்படவேண்டும்.

                மார்க்சிஸ்ட்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அரசு அறிவித்த 25% இடத்தைக்கூட வழங்காமல் தனியார் கல்வி நிலையங்கள் ஏமாற்றுகின்றன. மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடக்கின்றன. குடிசை மாற்று வாரிய குளறுபடிகள். பட்டா வழங்களில் உள்ள பாரபட்சம். இது களையப்படவேண்டும். தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், இட நெருக்கடிகளால் திணறும் மார்கெட்டுகள் என்று தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகள் ஏராளம் உள்ளன.

எங்களால் பகட்டான விளம்பரங்கள் செய்து பிரசாரம் செய்யும் உத்தி எதுவும் இல்லை. எளிமையாக ஒவ்வொரு வாக்காளரையும் வீடு தேடிச் சென்று, நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன். அதுதான் எங்கள் தேர்தல் வியூகம். நிச்சயம் வெல்வோம்." என்றார் நம்பிக்கையோடு.

- சி.தேவராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!