சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு!

ஆர்.கே.நகர்த் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்த தீபா இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னம் கேட்டு சசிகலா, பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். நேற்று இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை இரண்டு அணியினருக்கும் தர முடியாது என்றும், அ.தி.மு.க பெயரைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேலும், நாளைக்குள் (இன்று) கட்சியின் பெயர், சின்னங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, சசிகலா அணியினர், 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், தொப்பி, கிரிக்கெட் மட்டை, கத்தரிக்கோல், ஆட்டோ போன்ற சின்னங்களைப் பரிந்துரை செய்தனர். இதேபோல், பன்னீர்செல்வம் அணியினர் 'அதிமுக புரட்சித்தலைவி அம்மா ' என்ற பெயரையும், 'இரட்டை மின்கம்பம்' சின்னம் கேட்டு பரிந்துரை செய்தனர்.

இதனிடையே, சசிகலா அணிக்கு 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், 'தொப்பி' சின்னமும், பன்னீர்செல்வம் அணிக்கு 'அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா' என்ற பெயரும், 'இரட்டை மின்கம்பம்' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!