வைகுண்டராஜனுக்கு 'செக்' வைத்த சுங்கத்துறை! - தமிழக கனிமவள அதிகாரி ‘திடீர்’ சஸ்பெண்ட் | Tamilnadu govt suspends mineral department officer for acting in favour of v.v.minerals vaikundarajan

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (23/03/2017)

கடைசி தொடர்பு:13:42 (23/03/2017)

வைகுண்டராஜனுக்கு 'செக்' வைத்த சுங்கத்துறை! - தமிழக கனிமவள அதிகாரி ‘திடீர்’ சஸ்பெண்ட்

வைகுண்டராஜன்

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்த, கனிம வளத்துறையின் உதவி இயக்குநரை பணி இடைநீக்கம் செய்துள்ளது தமிழக அரசு. 'சுங்கத்துறை அதிகாரிகளின் முயற்சியால்தான் இப்படியொரு போலி ஆவணம் வெளி உலகின் கவனத்துக்குத் தெரியவந்தது. இதுவரையில் நடந்துள்ள மோசடிகள் குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்.

தூத்துக்குடி கடற்கரையில் 15 கி.மீ தூரத்தை மையமாக வைத்துக் கொண்டு தாதுமணல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். கடற்கரை மணலில் இருந்து கார்னட், இலுமனைட் உள்ளிட்ட தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணியில் 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 420 மெட்ரிக் டன் எடையுள்ள கார்னட் மணலை துபாயில் உள்ள ஜபேல் அலி துறைமுகத்துக்கு அனுப்புவதற்காக மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே போலியான ஆவணம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நேற்று விகடன் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியானது. இதையடுத்து, போலி ஆவணம் தயாரித்த கனிமவளத்துறையின் உதவி இயக்குநர் கிருஷ்ண மோகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தொழில்துறை ஆணையர் பழனிச்சாமி. 

வி.வி.மினரல்ஸ்தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "தாதுமணல் வர்த்தகத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் பின்னரும் இப்படியொரு மோசடி செயலில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்துள்ளனர். கலெக்டர் பெயரிலேயே போலியான ஆவணம் அச்சடிக்கப்பட்ட தகவல் வெளி வருவதற்குக் காரணமே, தூத்துக்குடி துறைமுக சுங்கத்துறையின் உதவி ஆணையர் அமித் குமார்தான். துபாய், ஜபேல் அலி துறைமுகத்துக்கு தாது மணலை ஏற்றுமதி செய்வது குறித்த மனுவை, கடந்த 8-ம் தேதி அளித்துள்ளனர்.

தாதுமணலை ஏற்றுமதி செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி அளித்துள்ளதாக கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர். இந்தக் கடிதத்தில் தூத்துக்குடி, கனிம வளத்துறையின் உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் கையெழுத்திட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் கையொப்பமோ, அலுவலக முத்திரையோ இடம் பெறவில்லை. ஒற்றைத் தாளில் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. 'இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுகிறது. இதன்பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுங்கள்' என சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ரவிக்குமாருக்குக் கடிதம் வந்தது. இதன்பின்னரும், 14.3.2017 அன்று சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்துக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், 'தாது மணல் ஏற்றுமதி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலத்தால் வழங்கப்பட்ட கடிதம் உண்மைதான்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்திலும் கலெக்டர் ரவிக்குமாரின் கையெழுத்து இல்லை. இதற்கு மேலும் இந்த விவகாரத்தை விட்டுவிடக் கூடாது என கலெக்டர் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர் சுங்கத்துறை அதிகாரிகள். 'தனக்கே தெரியாமல் இப்படியொரு மோசடி நடந்து வந்திருக்கிறது' என அதிர்ச்சியோடு பதில் அளித்தார் கலெக்டர் ரவிக்குமார். இதன்பின்னர், தாது மணல் ஏற்றுமதியை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர் சுங்கத்துறை அதிகாரிகள். 'வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்காக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் கனிமவளத்துறை அதிகாரி. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கனிமவளத்துறை ஆணையருக்குப் புகார் கடிதம் அனுப்பினார். அதோடு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட இருந்த 420 மெட்ரிக் டன் கார்னட் தாதுக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தால் அதிர்ந்த கனிம வளத்துறை ஆணையர், சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்துவிட்டார். போலி ஆவண அதிர்ச்சியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் இன்னமும் மீளவில்லை" என்கின்றனர். 

"வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்காக என்ன செய்தாலும், அரசு நிர்வாகம் தட்டிக் கேட்காது என்ற தைரியத்தில் கனிம வளத்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவரையும் மீறி உதவி இயக்குநர் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியிருக்காவிட்டால், இப்படியொரு மோசடி வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு வி.வி.மினரல்ஸ் மூலம் அனுப்பப்பட்ட அனைத்து ஏற்றுமதி விவகாரங்களையும் தீவிரமாக அலசி வருகிறோம். இதேபோல் ஏராளமான மோசடி ஆவணங்கள் வெளியில் வரும் என எதிர்பார்க்கிறோம்" என்கின்றனர் துறைமுக அதிகாரிகள். 

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு வைகுண்டராஜன் ஆதரவு கொடுத்த அதே நாளில்தான், இப்படியொரு போலி ஆவணத்தை வெளிக் கொண்டு வந்தனர் துறைமுக அதிகாரிகள். இரட்டை இலைச் சின்னத்தையே ஆணையம் முடக்கிவிட்ட சூழலில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அலசத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசின் சுங்கத்துறை. 

இது தொடர்பாக  வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தினர் விளக்கம் அளிக்க முன்வந்தால், அதை பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்! 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்