வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (24/03/2017)

கடைசி தொடர்பு:13:50 (24/03/2017)

அப்பா இறந்துவிட்டார்... அறிவியல் பரீட்சை எழுத வந்த மகன்..! - நெகிழ்ச்சி சம்பவம்

மாணவன் சுபாஷ் சந்தர்

ப்பா திடீரென ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். உடல் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. அம்மாவும், அக்காவும்,  அண்ணனும்   கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். வீடே சோகத்தால்  நிரம்பியிருக்கிறது. அப்பாவின் நினைவுகள்வேறு அந்த மாணவனை வாட்டி வதைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மறுநாள் அவனுக்கு அறிவியல் பரீட்சை. இதயத்தில் இடி இறங்கியது போன்ற இப்படியான சூழ்நிலைதான் பத்தாம் வகுப்பு மாணவனான சுபாஸ் சந்தருக்கும் நேர்ந்தது. வலி மிகுந்த அந்த சூழ்நிலையிலும் சுபாஸ் சந்தர் எடுத்த அந்த முடிவுதான் அத்தனை பேரின் கண்களையும் கலங்க வைத்திருக்கிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் சுபாஷ்சந்தர். அவனுடைய அப்பா பாரதி நேற்று முன்தினம் மாலை ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார். சுபாஷ்சந்தரோ...  அடிபட்டு இறந்துபோன தனது அப்பாவின் உடலைக்கூட பார்க்காமல், அறிவியல் பரீட்சை எழுத வந்துவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுக்க சுபாஷ்சந்தரைப் பற்றித்தான் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.  'அப்பாவின் மரணத்தை தாண்டி அறிவியல் பரீட்சை எழுதியது எப்படி?'  

 

 

பரீட்சை எழுதி முடித்து திரும்பிய சுபாஷ் சந்தருக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம், “எங்க அப்பா கூலி வேலைதான் சார் பாத்தாரு. எனக்கு ஒரு அண்ணனும், ஒரு அக்காவும் இருக்காங்க. அண்ணன் பன்னிரெண்டாவதுக்கு மேல படிக்கல. அக்கா காலேஜுக்கு போய்க்கிட்டு இருக்கு சார். எங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டுதான் சார்  எங்களை வளர்த்தாரு. எனக்கு அவ்வளவா படிப்பு வராது சார்; ஆவரேஜ் ஸ்டூடண்ட்தான். 'நான் பெருசா படிக்காததாலதான்டா இவ்ளோ கஷ்டப்படுறேன். உங்க அண்ணன்தான் படிக்காம போயிட்டான். நீயாவது ஒழுங்கா படிச்சுக்கோடா... உன் லைஃப் நல்லா இருக்கணும்னுதான்டா சொல்றேன்'னு டெய்லியும் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் சத்தம்போடுவார் அப்பா. ஆனா, நான் காதுலயே வாங்காம விளையாடப் போயிடுவேன்.

மாணவன் சுபாஷ் சந்தர்

 

நேத்து திடீர்னு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சி. அப்பா செத்துட்டாருன்னு சொல்றாங்க சார். வேப்பனப்பள்ளியிலேயிருந்து வீட்டுக்கு வரும்போது அடிபட்டு செத்துருக்காரு சார்... அம்மா, அண்ணனெல்லாம் அழுது அடிச்சிகிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுனாங்க சார்.  ஆனா, என்னால எங்க அப்பா செத்துட்டார்ங்கிறத  நம்பவே முடியல.  ஒழுங்கா படிச்சிக்கோடானு  அவர் என்கிட்ட அடிக்கடி சொல்ற வார்த்தை என் கண்ணு முன்னால ஓடிக்கிட்டே இருந்துச்சி. என்னதான் நான் அவர் பேச்சைக் கேக்கலன்னாலும் கூட என்னைய பத்தி ஊருக்குள்ள  எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லுவாரு சார்.  என்கிட்ட நேரடியா காட்டிக்க மாட்டார். இதையெல்லாம் யோசிச்சி யோசிச்சி எனக்கு என்மேலேயே ஆத்திரம் தாங்கல சார். அப்பா சந்தோஷப்படுற மாதிரி நாம நடந்துக்கிட்டதே இல்லையேனு குற்ற உணர்ச்சியா இருந்துச்சி சார்.  அதான், செத்துப்போன அப்பாவோட உடம்பைப் பார்க்குறதைவிட எங்க அப்பாவோட ஆசைய நிறைவேத்துறது முக்கியம்னு பட்டுச்சி சார். அழுகைய அடக்கிக்கிட்டு பரீட்சைக்கு போயிட்டேன் சார். ஸ்கூல்ல எல்லாரும் என்னையே பாத்தாங்க. ஒரு பத்து நிமிஷத்துக்கு என்னால எக்ஸாம் எழுதவே முடியல.  ஏதோ மாதிரி இருந்துச்சி.  நல்லா படிடானு எங்க அப்பா சொல்றதை நெனைச்சிப் பாத்துக்கிட்டேன். கடகடனு எழுதிக்கொடுத்துட்டு வந்துட்டேன். இதுவரைக்கும் எப்படியோ... இனிமேல் நிச்சயமா நல்லா படிப்பேன் சார். எங்க அப்பா சாகல சார். என் கூடவே இருக்காரு சார்.'' 

வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பேசும் மகன் சுபாஷ் சந்தரை பெருமையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது பாரதியின் ஆன்மா!

- எம்.புண்ணியமூர்த்தி


டிரெண்டிங் @ விகடன்