வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (24/03/2017)

கடைசி தொடர்பு:14:31 (24/03/2017)

எண்ணூர் சிறுமி ரித்திகாவுக்கு மறுக்கப்படும் நீதி! - ஏன் தாமதிக்கிறது காவல்துறை?

நீதிக்காக காத்திருக்கும் ரித்திகா தரப்பு

ஹாசினி, நந்தினி, ரித்திகா... உங்களுக்கு இந்தப் பெயர்கள் நினைவில் இருக்கின்றனவா? இந்த மூன்று பெயர்களும் மற்றொரு செய்தியாகக் கடந்துவிடக்கூடியவையில்லை. பக்கத்து வீட்டு ஜஷ்வந்த், நாய்க்குட்டியுடன் விளையாடலாம் என்று ஆசை காண்பித்து சிறுமி ஹாசினியைக் கொன்றபோது, அவளுக்கு வயது ஏழு. காதல் என்ற பெயரால் ஏமாற்றி தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து, கர்ப்பமாக இருந்த நந்தினியைக் கொலை செய்து கிணற்றில் வீசியபோது அவளுக்கு வயது பதினாறு. இவை அனைத்திலும் கொடூரமாக, எதிர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ரித்திகாவை அதே குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ரேவதியின் குடும்பத்தினர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று கொலுசுக்காகக் கொன்றபோது அந்தப் பிஞ்சுக்கு வயது இரண்டே முக்கால்.

இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொடூரம்!

கடந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் இவை. ஹாசினி மற்றும் நந்தினி விவகாரத்தில் குற்றவாளிகள் தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மணலி குப்பைக் கிடங்கில் மூட்டைகளோடு மூட்டையாக உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ரித்திகா. எதிர்க் குடியிருப்பில் இருந்த ரேவதி, குழந்தையின் கொலுசுக்காகத்தான், அந்தக் குழந்தையைக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அந்தப் பகுதியில் இருந்த அடகுக்கடையில் வைக்கப்பட்டிருந்த கொலுசும் மீட்கப்பட்டது. ஆனால் ரித்திகா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று பல்வேறு தரப்பும் கூறி வந்தன. ஆனால் குழந்தையின் பிரேதப் பரிசோதனைத் தகவலறிக்கை கிடைத்தால் மட்டுமே அதை உறுதி செய்யமுடியும் என்று குழந்தையின் உறவினர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள்.

வேண்டுமென்றே தாமதிக்கும் காவல்துறை!

ரித்திகாவின் உறவினர்சம்பவம் நடந்து ஒருமாதம் கடந்துவிட்ட நிலையிலும், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தருவதில் காவல்துறை தரப்பு வேண்டுமென்றே இழுபறி செய்துவருவதாகக் கூறுகிறார் உயிரிழந்த ரித்திகாவின் பெரியம்மா சாமுண்டீஸ்வரி. அவர் கூறுகையில், "குழந்தை இறந்த இரண்டு நாட்களிலேயே மருத்துவ அதிகாரிகள் போலீசிடம் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் குழந்தையின் பெற்றோர் எண்ணூர் சரக இன்ஸ்பெக்டரிடம் பிரேதப் பரிசோதனை அறிக்கையைக் கேட்டபோது, துணை ஆய்வாளரிடம் வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஆனால் அந்த அறிக்கை தங்களிடம் இல்லை, மருத்துவமனையில்தான் இருக்கிறது என்று முன்னுக்குப் பின் முரணாக துணை ஆய்வாளர் தகவல்களைத் தருகிறார்.

'வழக்கு தொடர்பான விசாரணை எந்த அளவில் இருக்கிறது' என்று ஆன்-லைனிலேயே தெரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்களது இணையதளம் முடங்கியுள்ளதால், அதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதனால் அறிக்கையைத் தர மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி வேண்டுமென்றே இழுபறி செய்வதால் குழந்தைக்குப் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காவல்துறையே இப்படிச் செய்வதால் ரித்திகாவுக்குத் தகுந்த நியாயம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. தற்போது வழக்கறிஞர் வழியாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கேட்டு மனு ஒன்றை அளிக்க இருக்கிறோம். அதற்காவது, தகுந்த பதில் கிடைக்கவேண்டும்” என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தருவதில் ஏன் தாமதம் என்று கேட்டு எண்ணூர்க் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டோம். ஆய்வாளர் விடுமுறையில் இருப்பதாகவும் பிறிதொரு சமயம் தொடர்பு கொள்ளச் சொல்லியும் பதில் கிடைத்தது.

”என்னுடைய குழந்தை எப்படி இறந்திருக்கும் என்று பெற்ற எனக்குத் தெரியாதாங்க!. அவங்களை சீக்கிரம் அறிக்கையைத் தரச் சொல்லுங்க. என் பொண்ணுக்கு நியாயம் வேணும்” என்று இன்றும் மனம் தாளாமல் கதறிக்கொண்டிருக்கிறார் ரித்திகாவின் தாய்.

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்