'வேட்பு மனுவில் கணவர் பெயரில்லை!' - தீபா மனுவில் என்ன இருக்கிறது?

ஆர்.கே.நகரில் போட்டியிட, தீபா தாக்கல்செய்த வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரத்தில், கணவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும், தனக்குக் கல்விக்கடன், தனிநபர் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். இதற்காக அவர், மார்ச் 23-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவர் தாக்கல்செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், 'ஜெயக்குமாரின் மகள் தீபா என்றே குறிப்பிட்டுள்ளார். அதில், கணவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. அவருக்கு தி.நகரில் ஓட்டுரிமை இருப்பதாகவும், 2016-17ல் மொத்த வருமானம் 5 லட்சத்து 37 ஆயிரத்து 490 ரூபாயை வருமானவரித்துறையில் கணக்குக்காட்டியுள்ளார், வழக்குகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கையிருப்பாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உள்ளது. ராஜா என்பவரிடம் 40 லட்சம் ரூபாய், சுரேஷிடம் 20 லட்சம் ரூபாய், தினேஷ்பாபுவிடம் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இருசக்கர வாகனம் உள்ளது. 821 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அசையும் சொத்தின் மொத்த மதிப்பு, ஒரு கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 604 ரூபாய் என்று தெரிவித்துள்ளார். சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் மதிப்பு,  17 லட்சத்து 50 ஆயிரம். இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 2 கோடி ரூபாய். ஆந்திர வங்கியில் கல்விக்கடன் வாங்கிய வகையில் பாக்கித் தொகையாக 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். தன்னை குடும்பத்தலைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ-வும். 2007ல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ-வும், 2011ல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் ஜர்னலிஸமும் படித்துள்ளார்.  

 இதுகுறித்து தீபாவின் கணவர் மாதவனிடம் பேச, அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை. மாதவன் தரப்பில் பேசியவர்கள், "தீபாவுக்கும் அவர் கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதற்காக, கணவர் பெயரை உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடாதது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தீபாவைச் சுற்றி இருக்கும் தீயசக்திகளின் வேலையாகவே இதைப் பார்க்கிறோம். மாதவனின் அன்பை ஒருநாள் தீபா உணர்வார்" என்றனர். 

- எஸ்.மகேஷ் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!