வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (24/03/2017)

கடைசி தொடர்பு:16:29 (24/03/2017)

ரூ.15 கோடி வைரம், தங்கம், வெள்ளி அபேஸ்! நெல்லையை கலங்கடித்த அழகர் கொள்ளைச் சம்பவம்!

 

பாளையங்கோட்டையில் உள்ள அழகர் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் நுழைந்த மர்மக் கும்பல் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கொள்ளை அடித்துள்ளது.

நெல்லை மாவட்டம், மகாராஜநகரைச் சேர்ந்தவர், பாபு. இவரும் இவரது சகோதரர்களும் அழகர் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கடையை பாபு நிர்வகித்து வருகிறார். மூன்று மாடிகள் கொண்ட இந்தக் கடையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை மூடிவிட்டுச் சென்றார்.

இன்று காலை 10 மணியளவில் கடையைத் திறந்த போது, கடையை துடைத்து எடுத்தது போல அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பாபு. உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையை சோதனையிட்டனர். அப்போது, மாடியில் உள்ள இரும்புக்கதவை கேஸ் வெல்டிங் மூலம் அறுத்துவிட்டு மர்மக் கும்பல் உள்ளே நுழைந்துள்ளது தெரியவந்தது. பின்னர், சாவகாசமாக அங்கிருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியுள்ளது.

சோதனைக்குப் பின்னர் போலீஸார், கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு 15 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட கடையின் உள்ளே தங்கம், வைரம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் இருந்துள்ளன. அந்த பொருள்கள் அனைத்தையும் கொள்ளைக் கும்பல் வாரிச் சுருட்டிச் சென்று விட்டது. கைரேகை நிபுணர்கள், கடையில் உள்ள கைரேகைகளைப் பதிவு செய்தனர். நகைக் கடைக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

மேலும் போலீஸார், அந்தக் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த கேமராக்களை கொள்ளையர்கள் துண்டித்து இருப்பதை கண்டுபிடித்தனர். இருப்பினும் ஒரு கேமராவில் மட்டும் நான்கு பேர் கொண்ட கும்பல் கடையை உடைத்து உள்ளே நுழைந்து எந்த பரபரப்பும் இல்லாமல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவது பதிவாகி இருக்கிறது. கேமராவில் பதிவானவர்களின் உருவத்தை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு மாநகர காவல்துறை ஆணையர் திருஞானம் வந்து ஆய்வு செய்தார். அவரிடம் கேட்டதற்கு, 'இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் தனிப்படைகள் அமைத்துள்ளோம். விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நகரின் மையப்பகுதியில் இருக்கும் அந்த நகைக்கடைக்கு வாட்ச்மேன் உள்ளார். அவர் வெளிப்பகுதியில் இருக்கும்போது, நகைக் கடையின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தைரியமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆண்டனிராஜ்