வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (24/03/2017)

கடைசி தொடர்பு:17:14 (24/03/2017)

எச்சரிக்கை எதிரொலி! உயர்நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜர்!

chennai police commissioner george- Madras High Court

நீதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இன்று நேரில் ஆஜரானார். மேலும், வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, மத்திய குற்றப்பிரிவில் (சி.சி.பி.) 2011–ம் ஆண்டு வரை பல வழக்குகளில் விசாரணை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டிருந்த உயர்நீதிமன்றம், நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்கு விசாரணையை இரண்டு மாதத்தில் முடிக்க அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், நான்கு மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துபூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் காலஅவகாசம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், கடந்த 20-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், மார்ச் 27-ம் தேதி காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; ஆஜராகாதபட்சத்தில் அவர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

இந்தநிலையில், வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜரானார். இதையடுத்து, நிலுவை வழக்குக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அப்போது, வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறிய அரசு வழக்கறிஞர், வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கில் இருந்து ஆஜராக ஜார்ஜுக்கு உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது.