சென்னை கத்திக்குத்தில் விரைந்து செயல்பட்ட ரியல் ஹீரோயின்கள்... பப்பி, பெப்சி! #VikatanExclusive | Pepsi and Puppy helped to catch the man who stabbed a girl in T Nagar Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (24/03/2017)

கடைசி தொடர்பு:11:01 (25/03/2017)

சென்னை கத்திக்குத்தில் விரைந்து செயல்பட்ட ரியல் ஹீரோயின்கள்... பப்பி, பெப்சி! #VikatanExclusive

''மூத்தவ பேரு பப்பி... இளையவ பேரு பெப்சி. இவங்க இரண்டு பேரும்தான் என்னோட உசிரு”  பெத்த பிள்ளைங்களாட்டம் பேசுகிறார் ராமு. பக்கத்தில் நிற்கும் பப்பியும் பெப்சியும் அவரது செல்ல நாய்கள். ‘ச்சூ’னு... சொன்னா டைமிங்கில் கடிக்கும் நாய்கள். சென்னையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியவரை கவ்வி கைது செய்ய வைத்த நாய்கள்தான் இவை. 

கத்தியால் குத்தியவரை பிடிக்க உதவிய தெருநாய்கள்

தி.நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் சுஷ்மிதா. கொல்கத்தாவைச் சேர்ந்தவர். கடந்த புதன்கிழமை காலை 6 மணியளவில் சுஷ்மிதா வேலைக்குப் புறப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த சுஷ்மிதாவை வழிமறித்த இளைஞர் ஒருவர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால்  சுஷ்மிதாவைக் குத்தவும் செய்துள்ளார். அந்த இளைஞரிடம் இருந்து தப்பிய சுஷ்மிதா தெருவில் ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் சிலர் கத்தியால் குத்தியவரைத் துரத்தியிருக்கின்றனர். சம்பவ இடத்தில் பப்பியும், பெப்சியும் இருந்துள்ளன. இவையும் அந்த வாலிபரைத் துரத்தியிருக்கின்றன. ஒரு திருப்பத்தில் ரகுநாதன் என்ற அந்த இளைஞர் மடக்கப்பட்டார்.  தன்னைப் பிடிக்க முயன்ற இளைஞர்களை 'கத்தியால் குத்திவிடுவேன்' என அவர் மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றவர்களில் ராமுவும் இருந்தார். 

நடக்கும் களேபரத்தைப் பார்த்து பப்பியும் பெப்சியும் குரைத்துக் கொண்டிருந்தன. புத்திசாலித்தனமாக யோசித்த ராமு, பப்பியையும் பெப்சியையும்  ஏவி விட, அடுத்த விநாடி கத்தி வைத்திருந்த இளைஞர் மீது இரண்டும் பாய்ந்தன. சிறுத்தை வேகத்தில் பப்பியையும் பெப்சியையும் மேலே விழ திணறிப்போனார்.. கத்தி தொலைவில் போய் விழுந்தது.  தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் கத்தி வைத்திருந்தவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சுஷ்மிதாவைக் கத்தியால் குத்திய இளைஞரை  பிடித்துக் கொடுக்க மட்டும் பப்பியும் பெப்சியும் உதவவில்லை. சுஷ்மிதா ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குச் சென்ற போதும் ஆட்டோவின் பின்னாடியே ஓடிச் சென்று 'பத்திரமாக செல்கிறாரா' என்றும் பார்த்தன. இந்த காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. தொலைக்காட்சிகளும் செய்தியாக  ஒளிபரப்ப நாய்களின் நன்றியுணர்வு கண்டு, அந்த பகுதி மக்கள் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். பப்பிக்கும் பெப்சிக்கும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து மகிழ்ந்துள்ளனர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். 

பப்பியும், பெப்சியும் ராமுவிடம் வளர்ந்தாலும் அந்த பகுதி மக்களுக்கே செல்லக் குழந்தைகள் போலத்தான். இந்த இரண்டையும் பார்த்தால் எதையாவது வாங்கிக் கொடுத்து விட்டுத்தான்  பகுதிவாசிகள் செல்வார்கள். இரவு நேரங்களில் அடையாளம் தெரியாதவர்கள் யாரும் பகுதிக்குள் வர முடியாது. பப்பியும் பெப்சியும் 'வாட்ச்மேன்' பணியில் அவ்வளவு ஸ்ட்ராங்.

''எப்படி சொல்றதுன்னு தெரியல சார், மனுஷங்க நாமளே நம்ம கண்ணு முன்னால தப்பு நடக்கும்போது நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கி போயிடுறோம் . இல்ல பயந்துடுறோம். ஆனா இதுகளுக்கு தெரிஞ்சதெல்லாம் அன்பும் பாசமும் விசுவாசமும் மட்டும்தான்'' வாஞ்சையுடன் செல்ல நாய்களைத் தடவிக் கொடுத்தவாறே பேசுகிறார் ராமு. 
 
''தி.நகர் ஏரியாவுலதான் நான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். தினம் காலையில ஆறு மணிக்கு சுஷ்மிதா கிளம்பி போவாங்க, சாயங்காலம் ஏழு மணிக்கு ரிட்டர்ன் வருவாங்க, சம்பவம் நடந்த அன்னைக்கு காலைல ஆறேகால் மணி இருக்கும், இந்த பொண்ணும் ஒரு பையனும் ரெண்டு நிமிஷம் பேசிக்கிட்டு இருந்தாங்க .திடீர்னு இந்த பொண்ணு கத்திக்கிட்டே ஒடி வந்தாங்க, கத்துற சத்தம் கேட்டு ஓடிப்போனா அந்தப் பையன் கையில கத்திய வச்சு மிரட்டிக்கிட்டு இருந்தான். நானும் சுத்தி இருந்தவங்களும் துரத்தினோம். எங்களையும் குத்த முயற்சி பண்ணுனான். உடனே என்னோட பப்பியையும் பெப்சியையும் பார்த்து ‘அட்டாக்’னு கத்தினேன்.  அடுத்த விநாடி அந்த ஆளைக் கவ்வ ஓடிருச்சு. அவரு பயந்து ஒரு இடத்துல மாட்டிக்கிட்டாரு. நாங்க சுத்தி வளைச்சுட்டோம். என்னோட நாய்ங்க அவ்ளோ க்யூட்.

இதுல பெரியவள அஞ்சு வருஷமா வளர்த்துக்கிட்டு இருக்கேன், சின்னவள் எங்கிட்ட வந்து ஒரு வருஷமாச்சு. தெரியாத ஆட்கள் எங்க ஏரியாவுக்கு வந்தாலே இவங்க கொடுக்குற ட்ரீட்மெண்ட்டே வேற மாதிரி தான் இருக்கும்; அந்த மாதிரிதான் பழக்கி வச்சிருக்கோம். என்னோட ஆட்டோவுல தான் அந்த பொண்ண ஆஸ்பத்திரில சேர்த்தோம்; இப்போ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல. நல்லா இருக்காங்க '' எனக் கூறும் ராமுவின் கண்களில் ஒருவித பெருமிதம் தெரிகிறது. 

இனிமேலாவது... தெருநாய்தானேனு அலட்சியப்படுத்தாதீங்க... ஒருவேளை சோறு போடுங்க உங்களுக்கும் ஒருநாள் உதவி கிடக்கும்!

- ந.புஹாரி ராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்