’சசிகலா மக்களை மொட்டையடித்தார்... தினகரன் தொப்பி போடுகிறார்...!’ - சாடும் தீபா அணியினர்

தீபா

'தமிழக மக்களை மொட்டையடித்து விட்டு சிறைக்குச் சென்றுள்ளார் சசிகலா. அடுத்து, மக்களுக்கு தொப்பி போட ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நிற்கிறார்' என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவைத் தலைமைச் செய்தி தொடர்பாளர் செல்லராஜாமணி  தெரிவித்தார். 

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தீபாவின் பிரசார வியூகம் குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் செல்லராஜாமணி  கூறுகையில், "தேர்தலில் தீபா, போட்டியிடக்கூடாது என்று சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர். வேட்பு மனுதாக்கல் செய்ய மதியம் 12.45 மணிக்கு நாங்கள் சென்றோம். ஆனால் ஒரு மணியளவில் அங்கு வந்த டி.டி.வி.தினகரனை முதலில் வேட்பு மனுதாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர். எங்களை அரைமணி நேரம் காத்திருக்க வைத்தனர். 
வேட்பு மனு பரிசீலனைத் தொடங்குவதற்கு முன்பே தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகத் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பினர். டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவுக்கு கடும் ஆட்சேபனைத் தெரிவிக்கப்பட்டதால் எங்கள் மனுவை பரிசீலனை செய்ய காலதாமதமாகியது. தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் கணவர் பெயர் இல்லை என்றும், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் தீபாவை முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்றும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதற்கு தேர்தல் அலுவலர், 'கணவர் பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பது அவசியமில்லை' என்றார். அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் முன்மொழிந்த கையெழுத்தையும் கொடுத்தோம். இதன்பிறகு தீபாவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


ஏற்கெனவே மாதவன் குறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டார் தீபா.  மாதவன் மூலம் தீபா வளர்ச்சிக்குத் தடைசெய்ய சசிகலா அணியினர் சதிசெய்தனர். அந்தச் சதியை முறியடித்து விட்டோம். வேட்பு மனுவில் மாதவனின் பெயரைக் குறிப்பிடாததது தீபாவை குறித்து நிலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதனால் மத்திய அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை தேர்தல் பணிகளில் பயன்படுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. சசிகலா, அவரது குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கும் சூழ்நிலையில் மக்களை மொட்டையடித்து முதல்வராக சசிகலா திட்டமிட்டார். அதற்குள் அவர் சிறைக்குச் சென்று விட்டார். தற்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த தொப்பியை மக்களுக்குப் போட டி.டி.வி.தினகரன் முயற்சிக்கிறார். அதற்கு மக்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். ஏனெனில் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலைச் சின்னத்தைக் கூட சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களால் எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு சசிகலா, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் மதுசூதனன். மேலும் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். முதல்வராக இருந்த அவரால் கூட ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. இவர்களின் சுயரூபம் மக்களுக்குத் தெரியும்" என்றார். 

 - எஸ்.மகேஷ் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!