வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (25/03/2017)

கடைசி தொடர்பு:11:44 (25/03/2017)

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 60 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

Edappadi K. Palaniswami

மின்சாரம் தாக்கியும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராம உட்கடை மேலப்பட்டியைச் சேர்ந்த சுருளிச்சாமி என்பவரின் மகன் காமாட்சி; திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ரத்தினம்; சிவகங்கை மாவட்டம், அ. காளாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் சுரேஷ்; காஞ்சிபுரம் மாவட்டம், ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி அமுதா; திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அருமைநாயகம்;

ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த  அய்யாப்பிள்ளை என்பவரின் மகன் பீட்டர் மற்றும் அவருடைய மகன் மதன்; தஞ்சாவூர் மாவட்டம், மேலதிருப்பூந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் செல்வன் கிஷோர்; தஞ்சாவூர் மாவட்டம், சேலக்களக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருளப்பன் என்பவரின் மகன் கருப்பையன்; கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் கிராமம், இடையர்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரசாமி என்பவரின் மகன் விஷ்ணுகுமார்; காஞ்சிபுரம் மாவட்டம், நீலாங்கரை கிராமத்தைச் சேர்ந்த மகாராஜா என்பவரின் மகன் மணிகண்டன் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த ராதிகா; மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அய்யங்காளை; மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சௌந்திரபாண்டியன்; மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சின்னசாமி; திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கிருஷ்ணன்; ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த க.கலைமணி மற்றும் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கடாசலம்; அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த முருகானந்தம் ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளிலும் உயிரிழந்த மேற்கண்ட 20 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்,  அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.