வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (25/03/2017)

கடைசி தொடர்பு:12:13 (25/03/2017)

குந்துகாலில் மீன் இறங்கு தளம் அமைக்க ஆய்வு!

ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலின் பாக் நீரிணை பகுதியையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்த நிலையில் நமது கடல் எல்லை குறுகலாகி போனது. மேலும், மீன்பிடி படகுகளும் அதிகரித்து விட்டன. இதனால் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாவதும், சிறை பிடித்து செல்லப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக நடந்து வருகிறது. தற்போது வரை 142 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளன. கடந்த 6-ம் தேதி மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Gangandeep Singh Inspects Kunthakal

இந்நிலையில், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தற்காலிக தீர்வினை ஏற்படுத்தும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாக் நீரிணை பகுதிக்கு பதிலாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பு முறையினை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கென பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தினை தமிழக மீன்வளத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு செய்தார்.

Gangandeep Singh Inspects Kunthukal

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "60 கோடி ரூபாய் செலவில் கை விரல் அமைப்பிலான மீன் இறங்குதளம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு சுமார் 300- க்கும் அதிகமான படகுகள் நிறுத்தும் வாய்ப்புள்ளது. இதற்கான அனுமதி அரசிடம் இருந்து கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். இங்கிருந்து மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்வதன் மூலம் நமது மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், மத்திய- மாநில அரசுகள் இணைந்து 113 கோடி ரூபாய் செலவில் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ளது. இத்திட்டங்கள் நிறைவேறுவதன் மூலம் நம் மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும்" என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மீன் துறை அதிகாரி மோகன சுந்தரம், வட்டாட்சியர் கணேசன், மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு, அருளானந்தம், எமரிட், சகாயம் ஆகியோர் உடனிருந்தனர்.

-இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி