ரஜினியின் திடீர் முடிவு! அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன? | What the politicians have to say about Rajini's decision!

வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (25/03/2017)

கடைசி தொடர்பு:15:47 (25/03/2017)

ரஜினியின் திடீர் முடிவு! அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

rajinikanth

இலங்கை பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் திடீரென ரத்து செய்தது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கை பயணத்தை இன்று திடீரென ரத்து செய்வதாக அறிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், "ரஜினிகாந்த் இலங்கை சென்றிருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவர் இலங்கை சென்றிருக்கலாம்" என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், "இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது. விளம்பரம் தேடுவதற்காக நாங்கள் யாரும் தலையிடவில்லை. ரஜினிகாந்த் வந்தால் பாதகமாக அமையும் என இலங்கைத் தமிழர்கள் கூறினர். அவர் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. லைகா ஏற்பாட்டில் நான் இலங்கை செல்வதாக தமிழிசை கூறுவது தவறு. சிங்களர்களின் போர் புனிதப் போர் அல்ல; தமிழர்களின் போர்தான் புனிதப்போர்" என்றார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், "ரஜினியிடம் தொலைபேசியில் கூறியதை நான் விளம்பரம் செய்யவில்லை. விளம்பரத்துக்காக ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கவில்லை. ரஜினி தவறான தகவல்கள் அடிப்படையில் இலங்கை செல்லவிருந்தார். ரஜினி ஒரு மாபெரும் மனிதர்" என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், "இலங்கை பயணத்தை ரத்து செய்ததற்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் துன்பங்களை ரஜினிகாந்த் நேரில் கேட்டறிய வேண்டும்" என்றார்.

அ.தி.மு.க அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், "தமிழர்களின் உணர்வை புரிந்து பயணத்தை ரஜினி ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.