“முள் இருக்கையா சென்னை போலீஸ் கமிஷனர் பதவி?”  முத்துக்கருப்பன் முதல் ஜார்ஜ் வரை! | Chennai Commissioner Seat is like a seat full of thorns!

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (25/03/2017)

கடைசி தொடர்பு:19:24 (25/03/2017)

“முள் இருக்கையா சென்னை போலீஸ் கமிஷனர் பதவி?”  முத்துக்கருப்பன் முதல் ஜார்ஜ் வரை!


                       சென்னை கமிஷனர் கரன்சின்ஹா                                        

'ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவுப்பதவி' என்று சென்னை போலீஸ் கமிஷனர் பதவியைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அப்படிப்பட்ட சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு வந்தவர்களையும், அந்தப்பதவிக்கு நேர்ந்த சோகங்களையும்,  2001-க்கு முன் 2001-க்குப் பின் என்று பார்த்தால் கிர்ர்ரடிக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனராக 2000-வது ஆண்டுவரையில்  இருந்த கே.காளிமுத்து, 2001-ம் ஆண்டு சமூகநீதித்துறை கூடுதல் இயக்குநராக மாற்றி நியமிக்கப்பட்டார். அதுவரையில் ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி-யாக இருந்த முத்துக்கருப்பனை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தார் அன்றைய முதல்வரான ஜெயலலிதா. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த  சென்னை போலீஸ் கமிஷனர் பதவி அப்போதுதான் ஐ.ஜி அந்தஸ்துக்கு இறங்கியது.முத்துக்கருப்பனும் அந்த இருக்கையில் அதிகநாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஓராண்டுக்குள்ளேயே அதே ஆயுதப்படை ஐ.ஜி-யாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். முத்துக்கருப்பனின்  இடமாற்றத்துக்குப் பின் , அதிரடிப்படை ஐ.ஜி-யாக இருந்த கே.விஜயகுமார் (2002) சென்னை போலீஸ் கமிஷனராக கொண்டு வரப்பட்டார். அதிரடிப்படை ஐ.ஜி-யாக ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டார். சட்டசபை உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக இரண்டு பத்திரிகையில் இருப்பவர்களை உடனடியாகக் கைதுசெய்ய ஜெ.அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்ற முடியாமல் கமிஷனர் விஜயகுமார் கோட்டைவிட்டார். திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனராக இருந்த சின்ராஜ், இந்த அலுவலங்களின் அத்தனை அறைகளையும் திறந்து பார்த்ததுதான் மிச்சம். அவர்கள் தேடிவந்த யாரும் கிடைக்கவில்லை. 


'ஜெ.சொல்லியும், சுப்பிரமணிய சாமியை பிடிக்காமல் விட்டார்' என்ற காரணத்துக்காக  போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால் மாற்றப்பட்டதுபோல் கமிஷனர் கே.விஜயகுமாரும் இந்த விவகாரத்தால், அதிரடிப்படைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.  மத்திய அரசுப்பணியில் இருந்த விஜயகுமாரை,  தமிழ்நாடு அதிரடிப்படை ஐ.ஜி பணிக்காக கேட்டு வாங்கிய ஜெயலலிதாவே, மறுபடியும் அவரை அதே அதிரடிப்படைக்கு அனுப்பிவைத்தார்.

விஜயகுமார் மாற்றப்பட்டதும் சென்னை போலீஸ் கமிஷனராக ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டார். தேர்தல் நேரத்தில் நடந்த உலக மகளிர் தினவிழாவில், "ஜெயலலிதா ஒரு லட்சியப் பெண்மணி..." என்று ஆரம்பித்து நிறைய பேசினார் போலீஸ் கமிஷனர் ஆர். நட்ராஜ். (இன்றைய மயிலாப்பூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ), இந்தப் பேச்சை, தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அனுப்பி வைத்தது. இதனால்  ஆர்.நட்ராஜ் பதவி பறிபோனது. சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் பட்டியலில், கே.வி.எஸ் மூர்த்தி, நாஞ்சில் குமரன், லத்திகா சரண் ஆகிய மூன்று பெயர்கள் தேர்தல் ஆணையத்துக்கு போக, அதில் லத்திகா சரண்  தேர்வானார். சென்னையின் முதல்பெண் போலீஸ் கமிஷனர் என்ற அந்தஸ்துடன் இருந்த லத்திகா சரண் அடுத்து வந்த தி.மு.க-வுக்கும் விசுவாசமாக இருக்கவே கமிஷனராக தொடர்ந்தார். 
உள்ளாட்சித்தேர்தலில் வரலாறு காணாத கலவரம் நடந்தபோது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் இதே லத்திகா சரண்தான். அவருடைய உச்சக்கட்ட விசுவாசமானது, டி.ஜி.பி பதவி வரை எதிரொலித்தது. தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி-யாக பணியில் இருக்கும்போதே நீண்ட விடுப்பில்  அனுப்பி வைக்கப்பட்டார் கே.பி.ஜெயின். ஆர். நட்ராஜ் உள்ளிட்ட மூன்று சீனியர்கள் பேனலில் இருந்தபோதும், முதல்வர் கருணாநிதி, லத்திகா சரண் பெயரை பரிந்துரைத்தார். சீனியர்கள் கோர்ட்டுக்குப் போனார்கள்.'மூவரும் டி.ஜி.பி அந்தஸ்துதானே... இதில் யாரை சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி-யாக பணியில் அமர்த்த வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவு' என்றது கோர்ட். லத்திகா சரண், தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி ஆனார். தமிழ்நாடு கேடரில், படித்த தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான திலகவதி, அப்போதும் கூடுதல் டி.ஜி.பி-யாகத்தான் இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த அவரை கடைசி வரையில் இரண்டு கழகங்களும் கமிஷனராக்க சம்மதிக்கவில்லை.

                                முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்
அதேபோல்,சென்னை போலீஸ் கமிஷனராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நடராஜனும் குறுகிய காலத்திலேயே இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னணி சுவாரசியமானது.... வைகோவுக்கும், ஜெயலலிதாவுக்கும் கட்சி  விஷயங்களில்  எதிர் எதிராக இருந்த காலம் அது. திருமண விழா ஒன்றில் கமிஷனர் நடராஜன், வைகோவைப் பார்த்து சிரித்து வைத்ததால் அவர் பதவி போனது. இப்படிப் பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் பார்த்து வந்தது இந்த சென்னை  போலீஸ் கமிஷனர் பதவி.தமிழக முதல்வராக 2011-ம் ஆண்டு ஜெயலலிதா  பதவி ஏற்றதும் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த திரிபாதி இடமாற்றம் செய்யப்பட்டு, ஜார்ஜ் கொண்டு வரப்பட்டார். அதன் பின்னணியையும் பார்த்துவிடுவோம். அண்ணாசாலையில் இருந்த அமெரிக்கத் தூதரகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. போலீஸ்கமிஷனர் திரிபாதி, "ஆர்ப்பாட்ட ஊர்வலம் எப்படி இருக்கிறது, நான் அங்கு வரவேண்டிய நிலைமை இருக்கிறதா?" என்று நிமிடத்துக்கு ஒருமுறை  மைக்கில் வந்த போதெல்லாம், ''எல்லாம் ஸ்மூத்தாக போகிறது சார், நோ ப்ராப்ளம்'' என்று  அடுத்தநிலை அதிகாரிகள் பலரும் சொல்லி வைத்தார்கள். கடைசியில், அமெரிக்கத் தூதரகம் உடைந்தது. 'எல்லாம் ஸ்மூத்' என்று கமிஷனரிடம் ரிப்போர்ட் கொடுத்தவர்கள், திரிபாதிக்கு பக்கத்தில் நின்றுகொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு கோட்டையில் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்கள். "என்னய்யா, மொத்த பேரும் இங்கிருக்கீங்க?" என்று திரிபாதி கேட்ட சில நிமிடங்களில் அவர் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-யாக்கப்பட்டிருந்தார். திரிபாதியை பக்குவமாக ஓரங்கட்டியதில் பல கைகள் இருந்தன. சென்னைக்கு ஜார்ஜ் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார். அதன்பிறகு ஜெ.வுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக 2015-ல் ஜார்ஜ் ஓரம்கட்டப்பட்டார். அந்த இடத்துக்கு கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அந்த சீட்டில் இருந்தபடியே டி.ஜி.பி அந்தஸ்தும் அடைந்தார்; ஆனாலும் கமிஷனராகவே தொடர்ந்தார். ஜெ.வின் கோபம் குறைந்ததும், சென்னை போலீசில் மூன்றாவது முறையாகவும் சென்னையின் 100-வது  கமிஷனராகவும் வந்து ஸ்ட்ராங்காக உட்கார்ந்தார் ஜார்ஜ்.


சென்னை கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் கையில் உளவுப்பிரிவு டி.ஜி.பி.,  சட்டம் -ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி ஆகிய இரண்டு பொறுப்புகளை ஜெயலலிதா ஒப்படைத்தார். இந்த 2017-ம் ஆண்டு இறுதிக்குள் டி.கே.ராஜேந்திரன் முன்னே, ஜார்ஜ் பின்னே என்ற வரிசையில், பணி ஓய்வு பெறவுள்ளனர். சட்டம்-ஒழுங்கு நிரந்தர டி.ஜி.பி பொறுப்புக்கு  இருவரில் யார் வந்தாலும், அதிலிருந்து மூன்றாண்டுகள் அவரே டி.ஜி.பி-யாக பணியில் இருப்பார். கூடுதலாக இரண்டரை ஆண்டுகாலம் பணி நீட்டிப்பும், தானாகவே நடந்துவிடும். ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் முடிவுகள் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடக் கூடிய தேர்தலாகவும் கருதப்படுவதால் அத்தனை  அதிகாரிகளும், அரசியல்வாதிகளை விட தீவிரமாக தேர்தலை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஜார்ஜ், மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் கரன்சின்ஹா  சென்னை போலீஸ்  கமிஷனராக வந்திருக்கிறார். தேநீரில் தொடங்கி உணவு ஐட்டம் வரையில் வீட்டிலிருந்தே வரவழைத்துக் கொள்ளும் கரன்சின்ஹாவால் பலருக்கும் தொண்டைநீர் வற்றத் தொடங்கியிருக்கிறது.


- ந.பா.சேதுராமன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்