வெளியிடப்பட்ட நேரம்: 23:48 (26/03/2017)

கடைசி தொடர்பு:07:50 (27/03/2017)

வெறும் கையெழுத்துதான், குழப்பம் வேண்டாம்: பொன்னார்

தமிழகம் உள்பட, நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு கடந்த 15-ம் தேதி அனுமதி வழங்கியது. இந்தத் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. நெடுவாசல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப் படாது என அரசுகள் தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. 

பொன்.ராதகிருஷ்ணன்

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஆனால், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை மறுத்துள்ளார். அதில், போராட்டக் குழுவினரிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கமளித்ததுபோல மக்களின் ஆதரவில்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. ஏற்கெனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் கையொப்பம் இடப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து என்ற செய்தியைவைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க