வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (27/03/2017)

கடைசி தொடர்பு:15:32 (27/03/2017)

முதல்வர் பழனிசாமியை விளாசும் பன்னீர் அணியின் முன்னாள் அமைச்சர்

டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 14 நாள்களாக போராடி வரும் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வேண்டியது தமிழக அரசுதான் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

Pandiyarajan

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டியராஜனிடம், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பாண்டியராஜன் , ”டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அரசுதான். முதல்வர் பழனிசாமி சுயசிந்தனையுடன் செயல்பட வேண்டும். விவசாயிகள் பிரச்னையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அனுமதி கேட்காமல் முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் கேட்பது போன்று நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நதிகள் இணைப்பு திட்டம், தமிழக நீர்வழிச் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழிச் சாலைக்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. சுமார் இரண்டரை கோடி ஒதுக்கி இருந்தாலே, நீர்வழிச் சாலை அமைக்க போதுமானதாக இருந்திருக்கும். 15,000 கோடி பற்றாக்குறையோடுதான் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அதில், 2.5 கோடி விவசாயிகளுக்கு ஒதுக்கி இருக்கலாம். இதற்கு மேலும் விவசாயிகள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க தாமதித்தால் முதல்வர் பொறுப்பில் இருக்க அவர் தகுதி அற்றவர்” என்று கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பாண்டியராஜன்,”அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சியின்  108 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்” என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க