வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (27/03/2017)

கடைசி தொடர்பு:13:43 (27/03/2017)

50 அடி ஆழக் கிணற்றில் ’கொம்பன்’... உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய 'தனிஒருவன்'!

'யானைகள் சாவுக்கு வனத்துறையினர்தான் காரணம்' என்று கூச்சலிட்டே பழகிவிட்ட நமக்கு, யானையை மீட்க வன ஊழியர்கள் உயிரையே பணயம் வைக்கும் போது பாராட்ட மனம் இல்லாமல் போனதோ...' என்று தோன்றியது. அதனால்தான் இந்தச் செய்தி... கிணறுகளில் விழும் வனவிலங்குகளில் யானைகளை மீட்பதுதான் சவால் நிறைந்தது. அதுவும் 50 அடி ஆழத்தில் விழுந்து கிடக்கும் யானையை மீட்பது சாதாரண காரியமா? அப்படி, கிணற்றுக்குள் கிடந்த கொம்பனை  உயிருடன் மீட்டு சூப்பர் சாதனை படைத்திருக்கின்றனர் கோவை வனத்துறையினர். 

கொம்பனுக்கு மணி கட்டிய கொம்பன்

பெரிய‌நாய‌க்க‌ன்பாளைய‌ம் வனச் ச‌ர‌க‌ம், கோவ‌னூர்ப் ப‌குதியில் கடந்த 22ந் தேதி இரவு தாயுடன் வந்த குட்டியானை தவறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. செய்தி அறிந்த வனத்துறையினர் யானையை மீட்க களம் இறங்கினார். யானை 50 அடி ஆழத்தில் இருப்பதால் அதனை எப்படி மீட்பது என்பதே குழப்பமாக இருந்தது. கோவை மாவட்ட வன அதிகாரி ராமசுப்ரமணியம் கால்நடை மருத்துவர்கள் அசோகன், விஜயராகவன், ரேஞ்சர் பழனிவேல் ராஜா ஆகியோர் கொண்ட குழு ஆலோசித்தது. கிணற்றின் ஆழத்துக்கு நிகராகப் பள்ளம் தோண்டுவது நடக்காத காரியம். அதனால், யானையின் வயிற்றுப் பகுதியில்  பெல்ட் போட்டு அதனை அப்படியே கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

ஆனால்,' பூனைக்கு மணி கட்டுவது யார்?' கிணற்றுக்குள் இருக்கும் யானையிடம் சென்று அதன் வயிற்றைச் சுற்றி பெல்ட் போடும் தைரியம் யாருக்கு வரும்?.  யானை அரை மயக்கத்தில் இருக்கும் போதுதான் பெல்ட் போட முடியும். மயக்க மருந்து அதிகமாகக் கொடுத்தால், யானை படுத்துவிடக் கூடும். கிணறோ குறுகலானது. யானை படுத்துவிட்டால், அதற்கு பெல்ட் போட முடியாது. அப்படியென்றால், யானையை அரை மயக்கத்தில் மட்டுமே ஆழ்த்த வேண்டும். அரை மயக்கத்தில் இருக்கும் காட்டு யானைக்கு அதுவும் கொம்புள்ள 'கொம்பன்' மீது ஏறி பெல்ட் போட எந்தக் கொம்பன் முன் வருவார்?.

கிணற்றில் இருந்து கிரேன் வழியாக மீட்கப்படும் யானை

கிணற்றுக்குள் இறங்கி கொம்பனுக்கு பெல்ட் போட வன ஊழியர்கள் முன்வந்தனர். வன அலுவலர் குமார், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ராசுக்குட்டி, குமார் கும்கி யானை சுஜயின் பாகன் தேவராஜ், பாரி யானையின் காவடி குமார் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்க முடிவு செய்தனர்.  யானைக்கு மயக்க மருந்து குறைந்த அளவே செலுத்தப்பட்டது. யானை அரை மயக்கத்தில் இருந்த போது, 5 பேரும் கிணற்றுக்குள் இறங்கினர். மற்றவர்கள் கிணற்றில் இருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொள்ள, பாரி யானையின் காவடி குமார் பெல்ட் போட கொம்பன் மீது ஏறினார். குமாரின் தோள்பட்டையில் தனிக் கயிறு கட்டப்பட்டிருந்தது. ஒருவேளை, கொம்பன் தாக்கத் தொடங்கினால் அவரை அப்படியே அலேக்காக மேலே தூக்கி விடும் திட்டமும் இருந்தது.

கொம்பன் மீது ஏறி குமார் அமர்ந்ததும் அதற்கு லேசாக நினைவும் திரும்பியது. காதை ஆட்டவும் தொடங்கியது. கிணற்றுக்குள் இருந்த அனைவரும் பயந்துபோனார்கள். மயக்க மருந்து சரியாகச் செலுத்தப்படவில்லை. உடனடியாக, மேலே இருந்து மருத்துவர்கள் மருந்து கலந்த ஊசியை அவசரம் அவசரமாக கயிறு மூலம் அனுப்பினார்கள். பின்னர், குமார் அதனை யானைக்குச் செலுத்த கொம்பன் அரை மயக்க நிலைக்குச் சென்றது.

கிணற்றின் அருகே வனத்துறை ஊழியர்கள்

இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அரை மயக்கத்தில் உள்ள யானை தாக்காது என்றெல்லாம் கருதிவிட முடியாது. ஒருவிதக் கணிப்பு, நம்பிக்கையின் அடிப்படையில்தான் குமார், கொம்பன்மீது ஏறி அமர்ந்து பெல்ட் அணிவித்திருக்கிறார். நிச்சயம் அதற்குத் தனி தைரியம் வேண்டும். கிணற்றுக்குள் விழுந்த யானை கடும் கோபத்திலும் இருக்கும். நினைவு திரும்பினால் குறுகிய கிணற்றுக்குள் என்ன செய்ய முடியும்?. மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கும். அந்த 'திக் திக்' நிமிடங்களைக் கடந்து யானையின் வயிற்றைச் சுற்றி குமார் பெல்ட் போட, பின்னர் கிரேன் வழியாக யானை மீட்கப்பட்டது. உண்மையில் இந்தியாவில் வேறு எங்கும் இப்படி எந்த யானையும் மீட்கப்பட்டதில்லை. மீட்கப்பட்ட குட்டியானை அடுத்த நாளே அதன் தாயுடன் சேர்ந்துவிட்டது என்பதும் கூடுதல் தகவல்.

இதுபோன்ற சூழலில் யானையைக் கையாள்வது குறித்து, ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் பத்ரசாமியிடம் பேசினோம், ''கிணற்றுக்குள் கிடப்பது கொம்பு முளைத்த குட்டியானை. குட்டி என்றாலும் அதன் பலத்துக்கு மனிதர்கள் ஈடுகொடுக்க முடியாது. கிணறோ குறுகியது. சமதளம் என்றாலும் தப்பித்துவிட வாய்ப்பு உண்டு. அரை மயக்கத்தில்தான் யானையை நிறுத்த வேண்டும். படுத்து விட்டால் பெல்ட் போட முடியாது. குறுகிய கிணறு என்பதால் நின்ற நிலையிலேயேதான் யானையை வெளியே எடுக்க வேண்டும். மற்ற விலங்குகளில் இருந்து யானையின் உடலமைப்பு வேறுபட்டது. யானைகளுக்கு இதயம், நுரையீரல் அடிவயிற்றுப் பகுதியை ஒட்டித்தான் இருக்கும். அதனால், அடி வயிற்றுப் பகுதியில் அதிக நேரம் இறுக்கம் கொடுத்துவிடக் கூடாது. 

மீட்கப்பட்டக் குட்டி யானை

கிணற்றுக்குள் இரும்புச் சட்டங்களும் இருக்கின்றன. அதில் யானை சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறுகிய நேரத்துக்குள் யானையை வெளியே எடுக்க வேண்டும். இப்படியெல்லாம் சவால்கள் இருந்தன. ஆனாலும் வனத்துறை ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து அந்த யானையைக் காப்பாற்றியுள்ளனர். இப்படி சாதனை படைக்கும் ஊழியகளுக்குக் காலணி வாங்கிக் கொடுக்கக்கூட வனத்துறையிடம் நிதி இல்லை. காடுகளுக்குள் பல மைல் சுற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு  நல்ல காலணி கூட வழங்குவது இல்லை. மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களுக்கு சாதனை படைக்கும் போலீசுக்கு வெகுமதி வழங்க நிதி அள்ளி வழங்கப்படுகிறது. ஆனால், வனத்துறையைத் தமிழக அரசு கண்டுகொள்வது கிடையாது. இதுபோன்று வனத்துறையினர் சாதிக்கும் போது பெரும்பாலும் எங்கள் கைக்காசு போட்டுதான் வெகுமதி அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்'' என வேதனைப்படுகிறார்.

ஊழியர்களுக்கு பணப் பரிசு

இந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினருடன் ஓசை, கோவை வன உயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை  (WNCT) போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன. உயிரைப் பணயம் வைத்து யானையை மீட்ட,  வனத்துறை ஊழியர்களுக்கு கோவை வன உயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை ரூ.26 ஆயிரம் வெகுமதி வழங்கியது. 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்