‘தினகரனை இப்படியும் வீழ்த்தலாம்!’ - அரசியல் கட்சிகளின் ‘ஆர்.கே.நகர் வியூகம்’ | We can defeat Dinakaran in this manner, plans opposition parties

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (27/03/2017)

கடைசி தொடர்பு:17:07 (29/03/2017)

‘தினகரனை இப்படியும் வீழ்த்தலாம்!’ - அரசியல் கட்சிகளின் ‘ஆர்.கே.நகர் வியூகம்’

டி.டி.வி.தினகரன்

வேட்பாளர்களின் தீவிர பிரசாரத்தால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 'டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான் பா.ஜ.கவின் திட்டம். இதை அறிந்து மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான பிரசாரத்தை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர் நிர்வாகிகள்' என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியாக இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மதுசூதனன், தே.மு.தி.க மதிவாணன், பா.ஜ.க கங்கை அமரன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் வேகம் கூட்டத் தொடங்கிவிட்டனர். "தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. தொப்பிச் சின்னத்தை வீதி வீதியாகக் கொண்டு சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறோம். வெளிமாவட்டங்களில் இருந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்துள்ளனர். 'எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்?' என பூத் வாரியாக நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார் தினகரன்" என விவரித்த அ.தி.மு.கவின் வடசென்னை நிர்வாகி ஒருவர், 

"எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருப்பதை மூத்த நிர்வாகிகள் கவலையோடு பார்க்கின்றனர். ஆர்.கே.நகர் பிரசாரத்திலும் ஜெயலலிதா பெயரை மையப்படுத்தியே பேசி வருகிறார் தினகரன். இதை மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை. தினகரனுக்கு எதிராகக் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். நேற்று முன்தினம் சசிகலா குடும்பத்தின் மூத்தவர் பேசும்போது, 'சசிகலா என்ற ஒருவர் இல்லாவிட்டால், அவரால் கட்சிக்குள் வந்திருக்க முடியுமா? பொதுச் செயலாளர் இல்லாவிட்டால், துணைப் பொதுச் செயலாளர் பதவி எங்கிருந்து வந்திருக்கும்? இறந்துபோன தலைவரா கட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்? தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் பதவிக்கு அங்கீகாரம் கிடைத்தால்தான், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் தினகரனால் நீடிக்க முடியும். சசிகலா பெயரையே பயன்படுத்தாமல் இருப்பது எப்படிச் சரியாகும்?' எனக் கோபத்தைக் காட்டினார். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஜெயலலிதாவை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார் தினகரன். 'ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என நம்பிக்கையோடு இருந்தார் தினகரன். தொப்பிச் சின்னம் கிடைத்த பிறகு, 'வெற்றி பெற்றால் போதும்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்" என்றார் விரிவாக. 

கங்கை அமரன்-தமிழிசை

"ஆர்.கே.நகர்த் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால், தங்களுக்கான அவமானம் என பா.ஜ.க நிர்வாகிகள் பார்க்கின்றனர். அதற்கேற்ப, சினிமா பாடலாசிரியரான கங்கை அமரனை வேட்பாளராகக் கொண்டு வந்தார்கள். தொகுதி முழுக்க நிறைந்திருக்கும் அட்டவணைப் பிரிவு மக்களை குறிவைத்தே வேட்பாளரை நிறுத்தியது பா.ஜ.க. தேர்தல் களத்தில் நேரிடையான மோதல் எழுந்ததை அடுத்து, 'டி.வியிலும் நமது எம்.ஜி.ஆரிலும் பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தை வேகப்படுத்துங்கள்' என உத்தரவிட்டுள்ளார் தினகரன். 'அ.தி.மு.கவுக்கு எதிராக பா.ஜ.க தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள்' என பா.ஜ.க நிர்வாகிகள் பேசினால், 'கொந்தளிப்பைக் காட்ட இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லையா?' எனச் சீண்டும் அளவுக்கு ஆளும்கட்சி ஊடகங்களில் கிண்டல் அடிக்கின்றனர். 'பா.ஜ.கவின் திட்டப்படிதான் பன்னீர்செல்வம் இயங்கி வருகிறார். வயதான காலத்தில் பிரசாரம் செய்வதற்குக்கூட மதுசூதனனால் முடியவில்லை. இரட்டை இலையை முடக்கி, அம்மா உருவாக்கிய கட்சியை அழிப்பதுதான் பன்னீர்செல்வத்தின் முக்கியப் பணி. இதை முறியடித்து இரட்டை இலையை மீட்க வேண்டும்' எனப் பேசி வருகின்றனர் அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர்கள். சினிமா நடிகர்கள் முதற்கொண்டு அனைத்து ஆயுதங்களையும் களத்தில் பிரயோகிக்க இருக்கிறார் தினகரன். வாக்கு எண்ணிக்கை நாளில் தினகரனின் பலம் தெரிய வரும்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

"தேர்தலில் பணத்தை வாரி இறைத்தால், பத்து சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அண்ணா தி.மு.கவின் அடிப்படை வாக்குகள் எதுவும் தினகரனுக்குக் கிடைக்கப்போவதில்லை. பணத்தையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அடிப்படை வாக்குகளை வாங்க முடியாது. தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ஜெயலலிதா மீது மிகுந்த பாசத்தில் இருக்கிறார்கள். அட்டவணை சமூகம் உள்பட உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினர் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இவர்களுடைய வாக்குகளைப் பெற வேண்டும் என்றால், சசிகலா பெயரை தொகுதிக்குள் முன்வைக்காமல் இருந்தாலே போதும் என அ.தி.மு.க நிர்வாகிகள் நினைக்கின்றனர். அதற்கேற்ப பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினாலும், 'களநிலவரம் டி.டி.விக்கு சாதகமாக இல்லை' என மாநில உளவுத்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்துள்ளனர். இதை அறிந்து ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் களத்தில் இறக்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். 'இவர்களை எல்லாம் தாண்டி, ஜெயலலிதா உருவாக்கிய அடிப்படை வாக்குகள் தினகரனுக்கு வருமா?' என்பது சந்தேகம்தான்" என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். 

"தொப்பிச் சின்னத்தில் களம் இறங்குகிறார் டி.டி.வி.தினகரன். அதே ஆர்.கே.நகரில் ஹெல்மெட் சின்னத்தைப் பெறும் சுயேச்சை வேட்பாளர், எம்.ஜி.ஆர் படத்தில் அவருடைய தலைக்கு ஹெல்மெட் மாட்டிவிடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? தொப்பிக்கும் ஹெல்மெட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? டி.டி.வியை எதிர்கொள்ள இதுபோன்று பல வியூகங்களை வைத்திருக்கிறோம்" என்கின்றனர் பா.ஜ.கவினர். 

- ஆ.விஜயானந்த்
படங்கள்:வி.ஶ்ரீநிவாசுலு


டிரெண்டிங் @ விகடன்