களத்தில் 82 பேர்... ஆர்.கே நகரில் இயந்திரமா... வாக்குச்சீட்டா?! | List of 82 candidates contesting at RK nagar by election, Is it going to be electoral machine or voting chit?

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (27/03/2017)

கடைசி தொடர்பு:14:27 (27/03/2017)

களத்தில் 82 பேர்... ஆர்.கே நகரில் இயந்திரமா... வாக்குச்சீட்டா?!

மின்னணு வாக்குப்பதிவு


சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு மீண்டும் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தேர்தல் கமிஷன், புதிய மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்யுமா அல்லது வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் இ. மதுசூதனன், தி.மு.க சார்பில் மருது கணேஷ் உள்பட 127 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, 44 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் தற்போது 82 பேர் உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சமாக 64 போட்டியாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்களே வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற முடியும். அதில் ஒன்று, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் 'நோட்டா'-வுக்கு ஒதுக்கப்படும். ஆனால், களத்தில் நோட்டாவையும் சேர்த்து 83 பேர் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை வரை, குறிப்பிட்ட சிலர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றாலும்கூட, சுமார் 70 பேர் வரை போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "63 பேருக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதால், மேம்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதா அல்லது வாக்குச்சீட்டைப் பயன்படுத்துவதா என்பதைத் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். இன்று (27-ம் தேதி) வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசிநாள். அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுவேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று விடுவார்கள். தற்போது அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள், தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, மார்க்சிய கம்யூனிஸ்ட் உள்பட 11 அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்தக் கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் தவிர, மாற்று வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருப்பவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்று விடுவார்கள். அதன் பின்னரும், போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை சுமார் 70-க்கும் மேற்பட்டோர் போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது. இன்னும் 10 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றால்தான், தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தேர்தல் நடத்துவதில் எந்தச் சிரமமும் இருக்காது. இன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் இருப்பதால் அதுவரை பொறுத்திருப்போம்" என்றார். 

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்களைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை பற்றிப் பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அலுவலகம்


மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, 'யாருக்கு வாக்களித்தோம்' என்று சீட்டு தரும் நடைமுறை வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன. தேர்தல் கமிஷனும், அதிக அளவில் வேட்பாளர்கள் இடம்பெறச் செய்யும் வகையில். புதிய இயந்திரத்தைத் தயாரிக்கும்படி. 2009-ம் ஆண்டே எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

இதுகுறித்துத் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேம்படுத்தப்பட்ட இயந்திரத்தைத் தயார் செய்து தரும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கிறது. இந்தப் புதிய இயந்திரம் 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் இந்தப் புதிய இயந்திரத்தை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். எதுவாக இருந்தாலும், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்" என்றார். 

தமிழ்நாட்டில் 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருந்து முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆர்.கே.நகரில், மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் முடிந்த பின்னரும், 63-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருக்கும்பட்சத்தில், தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதில், நீண்டகாலத்துக்குப் பின்னர் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தும் நிலை வரலாம். 

கடந்த பொதுத் தேர்தலின்போது, ஆர்.கே.நகரில் 1,200 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 350 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இடைத்தேர்தலுக்கு இவற்றைப் பயன்படுத்த, ஏற்கெனவே இயந்திரங்களில் பதிவாகியிருந்த வாக்குகளை அழித்து, சின்னங்களை அமைக்கும் வகையில் அவற்றைத் தயார் செய்யும் பணிகள் தொடங்கி, நடந்து வருகின்றன.

- பா.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்