வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (27/03/2017)

கடைசி தொடர்பு:09:04 (28/03/2017)

“இனி... எங்கள் போராட்ட வடிவம் மாறும்”- நெடுவாசல் மக்கள்!

நெடுவாசல் மக்கள்

விளைநிலங்களில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத் துறைக்கும், எரிவாயு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே இன்று கையெழுத்தானது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கூட்டமைப்பிற்கான நேருதவிச் செயலாளர் ராகேஷ் மிஸ்ரா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி நாட்டில் மொத்தம் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும். இதில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகள் மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளும் அடக்கம்.

  
நெடுவாசலில் கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பி.ஜே.பி எம்.பி ஒருவருக்குச் சொந்தமான ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனம், எரிவாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் மத்திய அரசுக்கு 60% வரை லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எரிவாயு இருக்கிறதா என்று சோதனை செய்யவே சில தனியார் நிறுவனங்கள் தங்கள் நிலப்பகுதிக்கு வந்ததாகவும், இயற்கை எரிவாயு எடுக்கும் பணி செயல்படுத்தப்போவது தங்களுக்கு தெரியாது என்றும் கூறி வந்தார்கள். போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களை மாநில அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார்கள், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள். "மக்களின் விருப்பத்துக்கு மாறாக திட்டம் செயல்படுத்தப்படாது" என்றார் அமைச்சர். 

நெடுவாசல் பகுதி

இருப்பினும், பிப்ரவரி 15-ம் தேதி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தது போலவே திட்டம் இன்று கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாகப் கருத்து கூறிய நெடுவாசல் போராட்டக் குழுவினர், "திட்டம் கையெழுத்தாவது என்பது, ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. கையெழுத்திடுவதால் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூற முடியாது. எங்கள் விருப்பத்திற்கு எதிராக நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வாக்குறுதி அளித்துள்ளனர். அவர்கள் எங்களிடம் முன்னரே கூறியதுபோல, மாநில அரசு மற்றும் எங்கள் மாவட்டக் கலெக்டருடன் இதுதொடர்பாக விவாதித்து, அடுத்தக்கட்ட செயல்திட்டம் முன்னெடுக்கப்படும். திட்டத்தை 100 சதவிகிதம் எதிர்க்கிறோம். கர்நாடக முன்னாள் எம்.பி-யின் நிறுவனம் எங்கள் பகுதிக்குள் நுழையாது. எங்களது எண்ணங்களுக்கு மதிப்பளித்து, திட்டத்தில் விலக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறோம். அதையும் மீறி திட்டம் செயல்படுத்தப்படுமானால், எங்கள் போராட்ட வடிவம் வேறு மாதிரியாக இருக்கும்" என்றனர்.

-ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்