எம்.ஜி.ஆர். ரசிகர்களைக் கவர, தீபாவின் அதிரடி! - படகில் ஏறுகிறாரா? #VikatanExclusive

தீபா


எம்.ஜி.ஆர். ரசிகர்களைக் கவர, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா படகு சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார். இந்தச் சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களின் ஓட்டுக்கள் அதிகளவில் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன், மதுசூதனன், கங்கைஅமரன், மருது கணேஷ், மதிவாணன், லோகநாதன் உள்பட 113 ஆண்கள், 14 பெண்கள் உள்பட 127 பேர் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் ச.ம.க வேட்பாளர் அந்தோணி சேவியர் மனு உள்பட45 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 82 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி பூசலால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் உருவாகின. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் உதயசூரியன் சின்னத்திலும், பா.ஜ.க.வேட்பாளர் கங்கைஅமரன் தாமரைச் சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் அரிவாள் சுத்தியல் சின்னத்திலும், தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன் முரசு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னம் விரைவில் ஒதுக்கப்படவுள்ளது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள், மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளனர். அதில் ஒரு சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால் டி.டி.வி.தினகரனுக்கும் மதுசூதனனுக்கும் சின்னம் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக அவர் போட்டியிடுகிறார். தனக்கு படகு சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார். படகு சின்னத்தை கேட்டதற்குப் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக தீபா அணியினர் தெரிவித்தனர். 
இதுகுறித்து தீபா அணியினர் கூறுகையில், "ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும், எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக மீனவர்கள் உள்ளனர். இதனால் படகு, பேனா, திராட்சைக்கொத்து ஆகிய மூன்று சின்னங்களைக் கேட்டுள்ளோம். எங்களது முதல்விருப்பம் படகுச் சின்னம். அந்தச் சின்னம் கிடைத்தால் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஓட்டுக்கள் எங்களுக்குக் கிடைக்கும். மேலும், ஜெயலலிதாவின் வாரிசான தீபாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிச்சயம் வாக்களித்து வெற்றி பெறச்செய்வார்கள்" என்றார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், "சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரே சின்னத்தை இரண்டுக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். படகு சின்னத்தை தீபாவைத் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறை பயன்படுத்தப்படும்" என்றனர். 

- எஸ்.மகேஷ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!