வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (27/03/2017)

கடைசி தொடர்பு:17:14 (27/03/2017)

‘இந்தியாவே தர்மபுரியாகத்தான் உள்ளது!’ கொதிக்கும் திருமாவளவன்

திருமாவளவன்

ர்மபுரியில் விடுதலை சிறுத்தைகளின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய அனைவரின் பேச்சும் இளவரசன் திவ்யாவையே மையப்படுத்தியே இருந்தது. பா.ம.க மீது பாய்ந்தது, திவ்யாவை திரும்ப அழைத்தது, என மாநாட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. 

 தன் கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி பேசினார் தோழர் தியாகுவின் மகள் சுதா. “இளவரசனை காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யா, இன்றும் ஆணவக் குற்றத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழில் திவ்யாவின் பேட்டி வெளிவந்தது. அந்தப் பேட்டி, திவ்யா இப்போதும் ஆணவக்குற்றத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார் என்பதற்கு மிகப்பெரிய சாட்சி. ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்றிவிட்டால், ஆணவப் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு கொடுமை நடந்துகொண்டிருக்கிறது என்பதையே அப்போதுதான் அரசு ஒப்புக்கொள்ளும். நம் உரிமைகளுக்காக நாம்தான் போராடியாக வேண்டும்” என்றார் சுதா.

 அடுத்ததாகப் பேசிய தலித் பெண்கள் இயக்கத்தின் தலைவர் பர்னாட் பாத்திமா, “ ‘சாதியை மீறி திருமணம் செய். அந்த வட்டத்துக்கு உள்ளேயே இருக்காதே’ என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். ‘எங்ககிட்ட சொத்து இருக்கு... பணம் இருக்கு. அதுக்காகத்தான் எங்க பொண்ணுங்கள லவ் பண்றீங்க’னு சிலர் சொல்றாங்க. பணம் என்னங்க பணம். எங்ககிட்ட இல்லாத பணமா? எங்க உழைப்பைச் சுரண்டித்தானே நீங்க பணம் பண்ணியிருக்கீங்க, இப்படி வளர்ந்திருக்கீங்க. ஆணவப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அரசு நிர்வாகத்துக்குப் பொறுப்பு இருக்கிறது. இளவரசனை மரணம் தற்கொலை என்று சொன்னார்கள். ஆனால், ‘அது தற்கொலை அல்ல’ என்று இளவரசன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டரே சொல்றார். இன்னும் எத்தனை இளைஞர்களை, பெண்களை சாதிக்குப் பலி கொடுக்கப் போகிறோம்? திவ்யா... நீ எங்கிருந்தாலும் எங்களோடு வந்து இணைந்துகொள். இந்த மகளிர் விடுதலை இயக்கத்தில், ஒரு தலைவியாக வந்து இணைந்துகொள் திவ்யா. நீ, எங்கள் குடும்பத்துப் பெண். எங்கள் பையனைத்தான் நீ திருமணம் செய்தாய். உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சாதி ஆணவத்திலிருந்து நாங்கள் உன்னை விடுவிக்கிறோம்” என்று அதிரடியாகப் பேசினார்.

 வி.சி.க-வின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், “தந்தைப் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் பிறந்த மண்ணில் ஆவணக்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவர்கள், கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். முஸ்லீம்கள், ரம்ஜான் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கே கொலைகளைக் கொண்டாடுகிறார்கள். நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இங்கு, நத்தத்தைக் கொளுத்தச் சென்றவர்கள், ‘தீபாவளி கொண்டாடப்போகிறோம், வா’ என்று மற்றவர்களை அழைத்துக்கொண்டு போனார்களாம். இத்தகைய படுகொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. திருச்செங்கோட்டில் தன் கல்லூரித் தோழியுடன் பேசிக்கொண்டிருந்த கோகுல்ராஜை, கழுத்தை அறுத்துக் கொன்றார்கள். உடுமலைப்பேட்டையில் கெளசல்யாவின் கண் எதிரே அவரின் கணவர் சங்கரைப் படுகொலை செய்தார்கள். இத்தகைய படுகொலைகள் மூலம் தங்கள் சாதியின் கெளரவம் பாதுகாக்கப்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள், கொலைகளைக் கொண்டாடுகிறார்கள். நாம், பிணவறைகளின் முன் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று உருக்கமாகப் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள்

 

இறுதியாக மைக் பிடித்த வி.சி.க-வின் தலைவர் திருமாவளவன், “இந்த மாநாட்டை, தர்மபுரியில் நடத்துவதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்தியா முழுவதும் தர்மபுரிகள் உள்ளன. ஏன், இந்தியாவே தர்மபுரியாகத்தான் உள்ளது. நான், தலித் இளைஞர்களைக் காதலிக்கத் தூண்டுவதாகச் சிலர் பிரசாரம் செய்கிறார்கள். தூண்டுவதால் காதல் வந்துவிடாது. ஜீன்ஸும், கூலிங் கிளாஸும் போடுவதால் காதல் வந்துவிடாது. எல்லா பெண்களையும் சமமாக மதிப்பவன் நான். யாரையும் இழித்துப் பழித்துப் பேசியது கிடையாது. திருமாவளவன் மீது குற்றம் சுமத்தி, அதை ஒட்டுமொத்த தலித் எதிர்ப்பு அரசியலாக்கப் பார்க்கிறார்கள். ஆதிக்க சாதி இளைஞர்கள், உண்மை தெரியாமல் என்னை விமர்சனம் செய்கிறார்கள். ஆணவப் படுகொலைகள் என்பது ஏதோ ஒரு ஆதிக்க சாதிக்கும் தலித்துகளுக்கும் உள்ள பிரச்னை கிடையாது. உயர் சாதியிலேயே வேறு வேறு பிரிவுகளில் திருமணம் செய்துகொண்டால்கூட, ஆணவக்கொலைகள் நடக்கின்றன. ஆணவப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும். ஆணவக்கொலைகளைத் தடுக்க, மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் ஒரு மசோதாவைத் தயாரித்துக்கொடுத்துள்ளது. அதை, மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வர்மா கமிஷன் சொல்லியிருக்கிறது. நீதிபதி கண்ணன் பத்துக் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். ஆனாலும், ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவரவில்லை. நீதிபதி வர்மா கமிஷன் தயாரித்துக்கொடுத்துள்ள மசோதாவை மத்திய அரசு, சட்டமாக்க வேண்டும்” என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி | படங்கள்: க.தனசேகரன்


டிரெண்டிங் @ விகடன்