வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (27/03/2017)

கடைசி தொடர்பு:17:52 (27/03/2017)

வழிகாட்டிய கலெக்டர்! முதலில் சீமைக்கருவேல மரம்; அடுத்து ஏரி மீட்பு: களம் இறங்கியது இளைஞர் பட்டாளம்


ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் என தமிழகத்தில் இளைஞர்களின் சக்தி அசைக்கமுடியாத சக்தியாக வலம் வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் இப்போது இளைஞர்கள் பல இடங்களில் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அரியலூரில் காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்து தூர்வார திட்டமிட்டுள்ளார்கள். முதல்கட்டமாக சீமைக்கருவேல மரங்களையும் அகற்றிவருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பள்ளி மாணவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த முயற்சி அரியலூரில் பல தரப்பட்ட மக்களிடம் நல்ல வரவேற்று கிடைத்து வருகிறது.

அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அருகேயுள்ளது கருங்குளம் ஏரி. இந்த ஏரியை 60 வருடமாக தூர்வாராமல் விட்டதால் கட்டாந்தரையாக மாறியுள்ளது. தற்பொழுது அந்த ஏரி சீமைக்கருவேல மரங்கள் மண்டிபோய் ஏரிக்கான தடையமே தெரியாமல் இருக்கிறது. இந்த ஏரியை மீட்பதற்காக இளைஞர்களுடன் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி மாணவர்களும் இணைந்து ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிக்கொண்டிருந்த இளைஞர்களை சந்தித்துப் பேசினோம்.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது. "அரியலூர் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்று தானே எல்லோருக்கும் தெரியும். ஆனால் இம்மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம் என சிறப்பாக இருந்ததால்தான் அரியலூரை தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தார் மாமன்னன் ராஜேந்திரன்சோழன். இம்மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம், மருதையாறுனு மட்டுமில்லாமல் இம்மாவட்டத்தைச் சுற்றி 121க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 20க்கும் மேற்பட்ட ஏரிகள்தான் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு என்ன காரணம். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான். அவர்கள் வேலை சரியாக செய்தால் ஏன் கடும் வறட்சி ஏற்படப்போகிறது. கடந்த ஒருவாரத்துக்கு முன்பு கூட அரியலூர் கலெக்டர் கல்லாத்தூரில் உள்ள மங்களம் என்ற ஏரியைக் கண்டுபிடித்து தூர்வாரவும் உத்தரவிட்டுள்ளார். இந்தச் செயலை சமூக வளைதளங்களில் கலெக்டரைப் பாராட்டி  இளைஞர்கள் செய்தி பரிமாரிக்கொண்டிருந்தார்கள். நாம் படித்துவிட்டு பாராட்டுவதை விட நாமே ஏன் களத்தில் இறங்கக்கூடாது என்று ஐந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களும் சிறப்பாக செய்யலாம் என்றார்கள். அதன் பிறகு கருங்குளம் ஏரியைப் பார்த்தபோது சீமைக்கருவேல மரங்கள் நிறைந்திருந்தது.

சீமைக்கருவேல மரங்களால் நீலத்தடி நீர் குறைவதோடு நமது சந்ததிக்கே ஆபத்து ஏற்படுகிறது என்று தெரிந்துகொண்டும் தமிழக அரசு சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் மெத்தனம் காட்டிவருகிறது. அவர்களை நம்பி எந்த புண்ணியமில்லை என்றபிறகு இளைஞர்களே மீட்போம் என்று கருங்குளம் ஏரியை மீட்கப் போகிறோம். உங்களுடைய உதவிகள் எங்களுக்குத் தேவை என்ற செய்தியை கிழப்பழூவூர் நண்பர்கள் என்ற வாட்ஸ்அப் குரூப்பில் செய்தியை ஷேர் செய்தோம். அதன்பிறகு இளைஞர்கள் வருவதுமட்டுமில்லாமல் கிராமமக்களோடு, சுவாமி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களோடு இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றத் தொடங்கினோம். முதல் சனிகிழமை 5 ஏக்கர், ஞாயிற்றுகிழமை 8 ஏக்கர் என இரண்டு நாள்களில் 13 ஏக்கர் அளவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளோம். 80 ஏக்கரில் உள்ள ஏரியில் கருவேல மரங்களை அகற்றுவது எப்படியும் ஒருவார காலம் ஆகும். அடுத்தக்கட்டமாக ஏரியின் கரை ஓரங்களில் வனத்துறை உதவியுடன் 2017 மரக்கன்றுகளையும் நட திட்டமிட்டுள்ளோம். சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு ஏரிகளை தூர்வாரவும் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ்ஜிடம் உதவிகேட்க உள்ளோம். எங்களுக்குக் கை கொடுக்க வாருங்கள். எங்களைப்போல் உங்கள் பகுதியில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரவும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கவும் முயற்சி செய்யுங்கள். அரசியல்வாதிகளை நம்பாமல் இளைஞர்களின் சக்தியை மட்டும் நம்பி களத்தில் இறங்குவோம் வெற்றிக் காண்போம். நம் மக்கள் நம் உரிமை என்ற நோக்கத்தோடு இறங்கி வேலை செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்" என்றார்.

பள்ளி மாணவர்களிடம் பேசினோம். "இந்த சீமைக்கருவேல மரங்கள் நம் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக ஆசிரியர்கள், இந்த அண்ணன்கள் எல்லாம் சொல்லிக் கேட்டு தெரிந்து கொண்டதால் அதன் அடிப்படையில்தான், நாங்களும் வருகிறோம் என்று சொன்னோம். இதுபோன்று மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டு நல்ல மரங்களை வளர்த்தால் மழை பெய்யும். நாடு செழிக்கும் அனைவருக்கும் நல்லது. அதனால்தான், மாணவர்களாகிய நாங்களே மரம் வெட்ட வந்துள்ளோம் இதனை அறிந்து அனைத்து இளைஞர்களும், மாணவர்களும் இயற்கை சார்ந்த விஷயங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

- எம்.திலீபன்

படங்கள்: ராபர்ட்