வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (27/03/2017)

கடைசி தொடர்பு:19:19 (27/03/2017)

நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் ஒருவர் கைது

gold robbery

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நகைக்கடையில் 24-ம் தேதியன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள அழகர் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 24-ம் தேதியன்று மர்ம நபர்கள் ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.

அந்த கும்பலைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவானது. தொடர்ந்து அந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சித்தூர், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காரில் வந்த 5 வட மாநிலத்தவர்களிடம் இருந்து இந்த நகைகள் மீட்கப்பட்டது. சோதனை நடந்து கொண்டிருந்தபோதே அந்த ஐந்து பேரும் வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர். சுமார் 100 போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் தப்பியோடிய ஐந்து பேரில் காலித் சேக் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 37 கிலோ தங்க நகைகளும் 7 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

-ஆண்டனிராஜ்