‘போராடவேண்டியது தமிழகத்திலா... டெல்லியிலா?’ - பொன்னார் கேள்வி

Pon.Radhakrishnan

கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில், பெரும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. இன்று 15-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'போராட்டம் நடத்தவேண்டியது தமிழகத்திலா... டெல்லியிலா?' என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர், 'காரிஃப் பயிர் நிலைமைகுறித்து நவம்பர் மாதம் தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை தந்திருக்க வேண்டும். அதுகுறித்த விவரம் தங்களுக்குத் தெரியுமா? என வேளாண்துறைச் செயலாளர் கேள்வி கேட்டபோது, சரியான பதிலளிக்க முடியாமல் இருந்தவர்கள் சிலர் தூண்டிவிட, மத்திய அரசை மட்டும் குறை சொல்லிப் போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன? காரிஃப் பயிர் நிலைமை குறித்து விவரமான அறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியுள்ளதா என்பதைப் போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? அப்படியெனில், இவர்கள் போராடவேண்டியது தமிழகத்திலா... இல்லை டெல்லியிலா? போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!