ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  ஆதரவு யாருக்கு? குழம்பித் தவிக்கும் சரத்குமார் | Sarathkumar's party yet to take a stand on RK Nagar byelection

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (28/03/2017)

கடைசி தொடர்பு:18:17 (28/03/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  ஆதரவு யாருக்கு? குழம்பித் தவிக்கும் சரத்குமார்

சமக வேட்பாளர் அந்தோணி சேவியர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன், பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்பட 127 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 70 மனுக்களில் 8 பேர் வாபஸ் வாங்கினர். இதனால் தேர்தல் களத்தில் 62 பேர் உள்ளனர். 

 ச.ம.க. வேட்பாளராக துணைப் பொதுச் செயலாளர் அந்தோணி சேவியர் அறிவிக்கப்பட்டார். அவரது வேட்பு மனுவில் வேட்பாளரை முன்மொழிந்த 10 வாக்காளர்களில் ஒருவர், வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்று காரணம் காட்டி அந்த மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அந்தோணி சேவியருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து கட்சியின் நிர்வாகிகளுடன் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் யாரை ஆதரிக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. ஆனால், எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 
இதுகுறித்து ச.ம.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், "எங்களது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தோம். தற்போது, யாருக்கு ஆதரவு அளிப்பது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கட்சித் தலைமை முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட இப்போதே தயாராகி வருகிறோம். ஆர்.கே.நகரில் ச.ம.க. போட்டியிடாதது தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் உள்ளாட்சித் தேர்தலுக்குரிய பணிகளை மேற்கொள்ள கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்"என்றனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை சரத்குமார் அறிவிக்காததால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள ச.ம.க.வினரை மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பணிக்கு அழைத்து வருகின்றனர். கட்சித் தலைமை முடிவு தெரியாததால் அவர்கள் அமைதியாக உள்ளனர். சரத்குமாரின் முடிவை ஆவலுடன் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

- எஸ்.மகேஷ் 


  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close